

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பலத்த மழை பெய்ததையடுத்து திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் உள்ள அணைகளில் நீர் மட்டம் உயர்ந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் அணைப்பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளது.
அதிகபட்சமாக சேர்வலாறு அணைப்பகுதியில் நேற்று காலை நிலவரப்படி 46 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இதுபோல் பாபநாசம் அணையில் 43 மி.மீ., மணிமுத்தாறு அணையில் 20.6, கொடுமுடியாறு அணையில் 15 மி.மீ. மழை பெய்துள்ளது, களக்காட்டில் 2.6 மி.மீ, சேரன்மகாதேவியில் 3.2 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.
அணைப்பகுதியில் பெய்த பலத்த மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 3,047 கனஅடி தண்ணீர் வந்தது. அணையிலிருந்து 1,264 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நீர்மட்டம் 110.20 அடியாக இருந்தது. மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 871 கனஅடி தண்ணீர் வரும் நிலையில் 150 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகள் மற்றும் மாவட்டத்தில் பரவலாக அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக அடவிநயினார் அணையில் 52 மி.மீ. மழை பதிவானது. கருப்பாநதி அணை, குண்டாறு அணையில் தலா 25 மி.மீ., செங்கோட்டையில் 22, ஆய்க்குடியில் 18 , தென்காசியில் 13.40. கடனாநதி அணையில் 15, ராமநதி அணையில் 10, சங்கரன்கோவிலில் 3, சிவகிரியில் 2.20 மி.மீ. மழை பதிவானது.
தொடர் மழையால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. கடனாநதி அணை நீர்மட்டம் இரண்டரை அடி உயர்ந்து 71.50 அடியாக இருந்தது.
ராமநதி அணை நீர்மட்டம் இரண்டே முக்கால் அடி உயர்ந்து 70.75 அடியை எட்டியது. கருப்பாநதி அணை நீர்மட்டம் ஐந்தரை அடி உயர்ந்து 68.96 அடியாக இருந்தது. குண்டாறு அணை தொடர்ந்து முழு கொள்ளளவில் உள்ளது.
அடவிநயினார் அணை நீர்மட்டம் 129.25 அடியாக இருந்தது. 132.22 அடி உயரம் உள்ள இந்த அணை இன்று நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நேற்று விடுமுறை தினம் என்பதால் அருகில் உள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்கள் குற்றாலத்துக்கு வந்து அருவியை பார்த்து ரசித்தனர். கரோனா ஊரடங்கால் அருவிகளில் குளிக்கத் தடை நீடிக்கிறது.