Published : 25 Jul 2021 03:15 AM
Last Updated : 25 Jul 2021 03:15 AM

அம்பலூர் பகுதி நிலத்தடி நீராதாரத்தை பாதுகாக்க பாலாற்றின் குறுக்கே தடுப்பணையுடன் கூடிய உயர்மட்ட மேம்பாலம்: பாலாறு பாதுகாப்பு ஆர்வலர்கள் கோரிக்கை

அம்பலூர்-எக்லாஸ்புரம் இடையில் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தரைப் பாலம். (கோப்புப்படம்)

வாணியம்பாடி

வாணியம்பாடி வட்டத்தில் பாலாற்றின் குறுக்கே நெடுஞ்சாலைதுறை சார்பில் புதிதாக கட்டப்படவுள்ள இரண்டு மேம் பாலங்களுடன் தடுப்பணையை சேர்த்து கட்ட வேண்டும் என பாலாறு பாதுகாப்பு ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தின் விவசாய வளர்ச்சிக்கு பெரும் பங்கு பாலாற்றை சேரும். தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழையால் பாலாற்றில் கிடைக்கும் நீரால் நிலத்தடி நீராதாரம் உயர்ந்து, விவசாயமும் செழிப்படைந்தது ஒரு காலமாக இருந்தது. பாலாற்றின் நீரை கர்நாடகமும், ஆந்திரமும் வழியிலேயே அப கரிப்பதால் தமிழக பகுதியில் ஓடும் பாலாற்றுக்கு நீர்வருவது தொடர்ந்து தடுக்கப்பட்டு வருகிறது.

பாலாற்றில் எப்போதாவது வரும் நீரையும் தேக்கி வைக்க முடியாத நிலையில் அதிகளவில் தடுப்பணைகளை கட்டி வீணாகும் தண்ணீரை சேமிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். தேர்தல் கால வாக்குறுதிகளாக இருந்து வரும் தடுப்பணை தொடர்பாக தற்போது ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் வேலூர் மாவட்டத்தில் மூன்று, திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரு தடுப்பணை கட்டுவதற்கான அறிவிப்புடன் நிதி ஒதுக்கீடும் செய்யப்படும் என கூறப்படுகிறது.

மேம்பாலத்துடன் தடுப்பணை

இதற்கிடையில், வாணியம்பாடி வட்டத்துக்கு உட்பட்ட ஆவாரங் குப்பம் முதல் திம்மாம்பேட்டை வரை, அம்பலூர் முதல் எக்லாஸ்புரம் வரை பாலாற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படவுள்ளது. இதில், அம்பலூர்-எக்லாஸ்புரம் இடையி லான தரைப்பாலம் மோசமாக சேதமடைந்துள்ளது. அதனை அகற்றி உயர்மட்ட மேம்பாலம் கட்ட வுள்ளனர். இதற்கான பணிகளை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

ஆவாரங்குப்பம் முதல் திம்மாம் பேட்டை உயர்மட்ட மேம்பாலம் அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது. அதேபோல், அம்பலூர் முதல் எக்லாஸ்புரம் வரையிலான உயர்மட்ட மேம் பாலத்தை நபார்டு திட்டத்தில் மேற்கொள்ள நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர்.

மேம்பாலங்கள் கட்டுவதற்காக பாலாற்றின் குறுக்கே கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள இருப் பதால் தடுப்பணையுடன் சேர்த்து கட்ட வேண்டும் என பாலாறு பாது காப்பு ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதன்மூலம் நிலத்தடி நீராதாரம் பாதுகாப்பதுடன் செலவும் குறையும் என கூறப்படுகிறது.

இதுதொடர்பாக பாலாறு பாதுகாப்பு ஆர்வலர் அம்பலூர் அசோகன், ‘இந்து தமிழ் திசை’ யிடம் கூறும்போது, ‘‘அம்பலூர் பாலாற்றுப் பகுதியில் இருந்து கடந்த 40 ஆண்டுகளாக திருப்பத்தூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை நகராட்சிகள், நாட்றாம்பள்ளி பேரூராட்சி, ரயில்வே குடிநீர் தேவை, தெக்குப்பட்டு சந்தன ஆலை மற்றும் திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்காக தொடர்ந்து நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டது. பாலாற்றில் நீர்வரத்தும் இல்லாததால் சுற்றியுள்ள பகுதிகளில் 1,500 அடிக்கும் கீழ் நிலத்தடி நீர் சென்று விட்டதால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதற்கு தீர்வாக பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்பது தொடர் கோரிக்கையாக இருந்து வருகிறது. இப்போது, அரசு நிர்வாகம் தடுப்பணை கட்டும் முயற்சியை தீவிரப்படுத்தி இருக்கும் நிலையில் இரண்டு உயர்மட்ட மேம்பாலங்கள் வர உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

எனவே, செலவு குறைக்கும் வகையில் உயர்மட்ட மேம்பாலத்து டன் தடுப்பணை ஒன்றை சேர்த்து கட்ட வேண்டும். இதுகுறித்து தமிழக முதல்வர், நீர்வளத்துறை அமைச்சர், பொதுப் பணித்துறைக்கு கோரிக்கை கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது’’ என தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x