

தமிழகத்தில் ராமேசுவரம், கன்னியா குமரியில் கடலுக்குள் மிதக்கும் காற்றா லைகளை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மத்திய அரசு சார்பில் காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை விரிவுபடுத்தும் நோக்கத்தில், இந்தியாவில் உள்ள 7600 கிலோ மீட்டர் நீள கடற்பரப்பில் காற்றின் வேகத்தை அளவிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் குஜராத் மாநிலம், கட்ச் வளைகுடா பகுதியில் மணிக்கு 24.5 கிலோமீட்டர் வேகத்திலும், தமிழக கடல்பகுதியில் ராமேசுவரம், கன்னியாகுமரி கடல் பகுதியில் மணிக்கு 29 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று வீசுவது தெரிய வந்தது. இதையடுத்து வெளிநாடுகளில் அமைக்கப்பட்டுள்ளதுபோல, கடலுக்குள் மிதக்கும் காற்றாலைகளை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இத்திட்டத்தின்படி கடற்கரையில் இருந்து கடலுக்குள் இரண்டு கிலோமீட்டர் தூரத்துக்குள் மிதக்கும் காற்றாலைகள் அமைக்கப்பட உள்ளன.
இதுகுறித்து காந்திகிராம கிராமிய பல்கலைக்கழக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மைய ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் டாக்டர் வி. கிருபாகரன் கூறியதாவது:
காந்திகிராம பல்கலைக்கழக எம்.டெக். மாணவர் கோபிநாத், மாணவர் பரிமாற்றத் திட்டத்தின்கீழ் சுவீடன் நாட்டில் உள்ள உப்சலா பல்கலைக்கழகத்துக்கு படிக்கச் சென்றார். அங்கு கடல் பகுதியில் காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் குறித்து ஆய்வு மேற்கொண்டு ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்துள்ளார். கடலுக்குள் காற்றாலை அமைத்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை, மத்திய அரசு 2015 செப்டம்பர் 9-ம் தேதி வெளியிட்டது. இதற்கான ஆய்வின் முடிவில் இந்தியாவில் அதிக காற்று வீசும் கடற்கரை உள்ள மாநிலங்களாக குஜராத் மற்றும் தமிழகம் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளன.
முதற்கட்டமாக குஜராத் கடல் பகுதி யிலும், அடுத்தகட்டமாக தமிழகத்தில் உள்ள ராமேசுவரம், கன்னியாகுமரி கடல் பகுதிகளில் மிதக்கும் காற்றாலைகளை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள காற்றா லைகள் மூலம் ஆண்டுமுழுவதும் முழு நேரமும் மின்சாரம் தயாரிக்க முடியாது. 50 சதவீதம்தான் சாத்தியம். ஆனால், கடலுக்குள் அமைக்கப்படும் காற்றாலைகள் மூலம் ஆண்டுமுழுவதும் முழுநேரமும் மின்சாரம் தயாரிக்க முடியும். கடற்கரை பகுதியில் ஆண்டு முழுவதும் காற்று வீசிக்கொண்டிருக்கும். ஒரு மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் வகையில் கடலுக்குள் ஒரு காற்றாலை அமைக்க ரூ. 10 கோடி வரை செலவாகும். இது நிலப்பரப்பில் அமைக்கப்படும் காற்றாலையை விட கூடுதல் செலவு என்றாலும், அதைப் போல் இரண்டரை மடங்கு மின்சாரத்தை இடைவிடாமல் ஆண்டு முழுவதும் பெறமுடியும் என்றார்.
அமெரிக்கா முதலிடம்
கிருபாகரன் மேலும் கூறியதாவது: உலகளவில் கடலுக்கும் காற்றாலை அமைத்து மின்சாரம் தயாரிப்பதில் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது. இதற்கு அடுத்ததாக டென்மார்க் இரண்டாமிடமும், ஜெர்மனி மூன்றாமிடத்திலும் உள்ளது. நமது நாட்டில் தற்போது தான் கடல்கரை பகுதியிலிருந்து படிப்படியாக இரண்டு கிலோ மீட்டர் தூரம் வரை காற்றாலைகள் அமைக்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. குஜராத்தில் கட்ச் வளைகுடா பகுதியில் சுஸ்லான் நிறுவனம் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அடுத்தகட்டமாக தமிழகத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றார்.