

பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா இன்று கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு 15 நாள் சிறை தண்டனை விதித்து குழித்துறை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அவர் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையைச் சேர்ந்தவர் ஜார்ஜ் பொன்னையா. பாதிரியாரான இவர் கடந்த 18-ம் தேதி அருமனையில் கிறிஸ்தவ இயக்கம் சார்பில் நடந்த கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசினார். அப்போது, பாரத மாதா, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, அமைச்சர்கள் சேகர்பாபு, மனோ தங்கராஜ், நாகர்கோவில் தொகுதி எம்எல்ஏ எம்.ஆர்.காந்தி, முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் ஆகியோர் குறித்து அவதூறாகவும், கடும் விமர்சனம் செய்தும் பேசினார். மேலும், திமுக வெற்றி குறித்தும் சர்ச்சை கருத்தைக் கூறினார். இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்து அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துப் போராட்டங்களில் ஈடுபட்டனர். ஜார்ஜ் பொன்னையாவைக் கண்டித்து வருகிற 28-ம் தேதி அருமனையில் பாஜகவினர் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். இதனால் தனது சர்ச்சைப் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து ஜார்ஜ் பொன்னையா வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் அருமனை காவல் நிலையத்தில் பாஜக, மற்றும் இந்து அமைப்பினர் அளித்த புகாரின் பேரில் கடந்த 20-ம் தேதி அவர் மீது 143, 153ஏ, 295ஏ, 505(2), 506(1), 269, 3 ஆகிய 7 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதைப்போல் அருமனை கிறிஸ்தவ இயக்கச் செயலாளர் ஸ்டீபன் உட்பட மேலும் இருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ஜார்ஜ் பொன்னையா உட்பட 3 பேரையும் கைது செய்ய நெல்லை சரக டிஐஜி பிரவின்குமார் அபிநவ் உத்தரவின்பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. குமரி மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணன் தலைமையில் போலீஸார், பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவைக் கைது செய்யும் நடவடிக்கையைத் தீவிரப்படுத்தினர். அவர் தலைமறைவான நிலையில் இன்று மதுரை வழியாக சென்னைக்கு காரில் தப்பிச் சென்று கொண்டிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதனால் மதுரை எஸ்.பி. பாஸ்கரன் உத்தரவின் பேரில் அவரை வாகன சோதனையில் ஈடுபட்டு கைது செய்யும் நடவடிக்கையில் போலீஸார் ஈடுபட்டனர்.
மதுரை அருகே கருப்பாயூரணி பகுதியில் போலீஸார் இன்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அங்கு வந்த காரில் ஜார்ஜ் பொன்னையா இருப்பதை போலீஸார் அடையாளம் கண்டனர். காரைத் தடுத்து நிறுத்தியபோது நிற்காமல் வேகமாகச் சென்றது. போலீஸார் கருப்பாயூரணி நான்குவழிச் சாலையில் அதிவேகமாகச் சென்ற காரைத் துரத்திச் சென்று பிடித்தனர். அப்போது காரில் இருந்த ஜார்ஜ் பொன்னையாவை போலீஸார் கைது செய்தனர்.
பின்னர் அங்கிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக ஜார்ஜ் பொன்னையா அழைத்து வரப்பட்டார். ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். பின்னர் குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஜார்ஜ் பொன்னையாவிற்கு மருத்துவப் பரிசோதனை நடைபெற்றது. ஜார்ஜ் பொன்னையா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதை முன்னிட்டு குழித்துறை நீதிமன்றம், குழித்துறை அரசு மருத்துவமனை ஆகியவற்றில் டி.ஐ.ஜி. பிரவின்குமார் உத்தரவின் பேரில், குமரி எஸ்.பி. பத்ரிநாராயணன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னர் இன்று மாலை குழித்துறை குற்றவியல் நீதிமன்றத்தில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி செல்வம் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருநெல்வேலி அழைத்துச் செல்லப்பட்ட பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.