Last Updated : 24 Jul, 2021 05:55 PM

 

Published : 24 Jul 2021 05:55 PM
Last Updated : 24 Jul 2021 05:55 PM

யானைகள் நல வாழ்வு முகாம் இனி தேவைப்பட்டால் மட்டுமே நடத்தப்படும்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

கோவை மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோயிலில் இன்று ஆய்வுப் பணி மேற்கொண்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு.

கோவை 

யானைகள் நல வாழ்வு முகாம் இனி தேவைப்பட்டால் மட்டுமே நடத்தப்படும் என, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மேட்டுப்பாளையத்தில் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

அமைச்சர் ஆய்வு

கோவை மேட்டுப்பாளையத்தில் உள்ள வனபத்ரகாளியம்மன் கோயிலில், தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று (ஜூலை 24) ஆய்வு செய்தார்.

அதன் பின்னர், அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘திருக்கோயில்களில் 5 ஆண்டுகளுக்கு மேலாகப் பணிபுரியும் பணியாளர்கள், கருணை அடிப்படையில் வாரிசுகளுக்கு வேலை, திருக்கோயில்களில் காலியாக உள்ள காலிப் பணியிடங்கள் ஆகியவை அடுத்த மாதம் இறுதிக்குள் நிரப்பப்படும். ​

கோவை மாவட்டத்தில் உள்ள கோயில்களில் இதுவரை நடத்திய ஆய்வில், சில கோயில்களில் உள்ள பரம்பரை அறங்காவலர்கள் கோயில் திருப்பணிகளில் நாட்டம் இல்லாமல் இருப்பதும், இதனால் பணிகள் பாதிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளன. எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு, அனைத்துத் தடைகளையும் உடைத்தெறிந்து கோயில் திருப்பணிகள் விரைவுபடுத்தப்படும்.

எந்த வேறுபாடும் பார்க்காமல் நடவடிக்கை எடுத்து கோயில் குடமுழுக்குப் பணிகள் நடைபெறும். ஆன்மிகப் பெருமக்கள் மகிழ்ச்சியடைந்து முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆட்சிக் காலம் ஆன்மிகவாதிகளின் பொற்காலம் எனப் பாராட்டும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை செயலாற்றும்” என்றார்.

யானைகள் நலவாழ்வு முகாம்

இதைத் தொடர்ந்து மேட்டுப்பாளையத்தில் கடந்த எட்டு ஆண்டுகளாக, ஆண்டுதோறும் நடைபெற்று வந்த யானைகள் நலவாழ்வு முகாம், தொடர்ந்து நடைபெறுமா என்று செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு பதில் அளித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறும்போது, ''மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, கோயில் யானைகளுக்கு முழு உடற்பரிசோதனை நடத்தப்படும். 15 நாட்களுக்கு ஒருமுறை மருத்துவர்கள் மூலம் பரிசோதனை நடத்தப்படும். கோயில் யானைகளுக்கான நலவாழ்வு முகாமைப் பொறுத்தவரை கடந்த காலங்களில் இருந்த நிலை வேறு, தற்போதைய நிலை வேறு. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் வைத்துப் பராமரிக்கப்பட்டு வரும் யானைகளுக்கு அந்ததந்தக் கோயில்களிலேயே புத்துணர்வு பெறவும், ஆரோக்கியமாக இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்படுவதோடு யானைகள் கோயில்களிலேயே குளிக்க பிரத்யேக குளியல் தொட்டிகள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. எனவே, தேவை ஏற்பட்டால், கோயில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் தொடர்ந்து நடத்தப்படும்.

யானைகள் இல்லாத கோயில்களுக்கு, வீட்டில் வளர்த்து வரும் யானைகளை, உரிமையாளர்கள் தானமாக வழங்கினால், இந்துசமய அறநிலையத்துறையின் சார்பில், சட்டப்படி ஏற்றுக் கொள்ளப்படும். நலிவடைந்த உப கோயில்களை ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ள கோயில்களுடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தால், ஆக்கிரமித்தவர்கள் யாராக இருந்தாலும், போர்க்கால அடிப்படையில் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது, இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x