சென்னை பெரம்பூர் ஐசிஎஃப் ஒருபோதும் தனியார்மயமாகாது: வைகோவிடம் உறுதி அளித்த ரயில்வே அமைச்சர்

மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் உடன் வைகோ எம்.பி, கணேசமூர்த்தி எம்.பி.
மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் உடன் வைகோ எம்.பி, கணேசமூர்த்தி எம்.பி.
Updated on
1 min read

ஐசிஎஃப் ஒருபோதும் தனியார்மயமாகாது என, மாநிலங்களவை உறுப்பினர் வைகோவிடம், ரயில்வே அமைச்சர்
அஷ்வினி வைஷ்ணவ் உறுதி அளித்துள்ளார்.

இது தொடர்பாக, மதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும், ஈரோடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தியும், இன்று, டெல்லியில் ரயில்வே அமைச்சகக் கட்டிடம் ரயில் பவனில், ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்வைச் சந்தித்தனர்.

அமைச்சர் அன்புடன் வரவேற்றார். அத்துடன், 'நான் பிரதமர் வாஜ்பாய்யிடம் செயலாளராக இருந்தேன்; அப்போது நீங்கள் பொடா சட்டத்தின் கீழ் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தீர்கள்; அங்கிருந்து நீங்கள் பிரதமருக்கு எழுதிய கடிதங்களை எல்லாம், நான்தான் பிரதமரிடம் கொண்டு போய்க் கொடுப்பேன்; அவர் உங்கள் மீது எவ்வளவு பாசம் வைத்து இருந்தார் என்பதை நான் அறிவேன்; நீங்கள் ஒரு கொள்கைக்காக வாழ்கின்றவர்; எந்தக் கட்டத்திலும், நீங்கள் எடுத்த நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பவர் என்பதை நான் அறிவேன். அதனால், உங்கள் மீது எனக்குத் தனி மரியாதை உண்டு. இப்போது நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்? சொல்லுங்கள்' என்று கேட்டார்.

அமைச்சரிடம் வைகோ முன்வைத்த வேண்டுகோள்:

'இந்தியாவில் பொதுத்துறை நிறுவனங்களுள் மிகவும் லாபகரமாக இயங்குகின்ற ஒரு நிறுவனம், சென்னை பெரம்பூர் ஐசிஎஃப் ஆகும். அதுவும், அதைச் சார்ந்த உற்பத்தி அலகுகளும், பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு தருகின்றன. அதைத் தனியார்மயமாக்கப் போவதாகச் செய்திகள் வந்துகொண்டு இருக்கின்றன. இதனால், தொழிலாளர்கள் இடையே அச்சம் நிலவுகின்றது.

அதைத் தனியார்மயமாக்கினால் ஆட்குறைப்பு செய்து விடுவார்கள்; ஆயிரக்கணக்கானவர்கள் வேலை இழக்க நேரிடும். தொழிலாளர்களின் நலன்கள் முற்றாகப் புறக்கணிக்கப்படும்; எனவே, ஐசிஎஃப் நிறுவனத்தை, எந்தக் காரணத்தைக் கொண்டும் தனியார்மயமாக்கக் கூடாது' என்று கேட்டுக் கொண்டார்.

அதற்கு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், 'ஆமாம்; நீங்கள் சொல்வது சரிதான். உலகத்திலேயே இதுபோன்ற தொழிற்சாலைகள், ஒன்பது நாடுகளில் மட்டும்தான் இருக்கின்றன. எந்தக் காரணத்தைக் கொண்டும், தனியாரிடம் கொடுக்க மாட்டோம்' என்று உறுதிமொழி அளித்தார். 'இந்தச் செய்தியை, சென்னையில் உள்ள ஐசிஎஃப் தொழிலாளர்களுக்கு நீங்கள் தெரிவிக்கலாம்' என்றும் சொன்னார்.

அமைச்சருக்கு வைகோ நன்றி கூறினார். நெய்வேலி நிலக்கரி நிறுவனம் தனியார்மயமாவதைத் தடுத்து நிறுத்தியது போல், இன்றைக்கு, ஐசிஎஃப் தனியார் மயமாவதைத் தடுத்த மகிழ்ச்சியை வைகோ வெளிப்படுத்தினார்".

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in