Published : 24 Jul 2021 02:10 PM
Last Updated : 24 Jul 2021 02:10 PM

'சார்பட்டா' சர்ச்சை; எம்ஜிஆரைத் தவறாகச் சித்திரிப்பதா?- இயக்குநர் பா.இரஞ்சித்துக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்

’சார்பட்டா பரம்பரை’ படத்தில் எம்.ஜி.ஆரைத் தவறாகச் சித்திரித்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, கலையரசன், ஜான் கொக்கென், துஷாரா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'சார்பட்டா பரம்பரை'. அமேசான் ஓடிடியில் வெளியாகியுள்ள இந்தப் படத்தை விமர்சகர்கள் கொண்டாடி வருகிறார்கள். மேலும், சமூக வலைதளத்திலும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் குறிப்பிட்டுப் பாராட்டி வருகிறார்கள்.

இதில் திமுக கட்சிக்காரராக பசுபதி நடித்திருப்பார். மேலும், ஒரு காட்சியில் எம்.ஜி.ஆரைப் பற்றி சுவர் விளம்பரமும் இடம்பெற்றிருக்கும். இதனால் 'சார்பட்டா பரம்பரை' திமுகவுக்கு ஆதரவான படம் என்றும், அதிமுகவை விமர்சனம் செய்துள்ளதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது. இதை வைத்து இணையத்தில் பெரும் விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தற்போது 'சார்பட்டா பரம்பரை' படத்துக்கு எதிராக அதிமுகவைச் சேர்ந்த ஜெயக்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

"முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் நபர்களை நாம் அறிவோம். ஆனால் 30 ஆண்டுகால நல் ஆட்சியையே திட்டமிட்டு ஒரு படத்தில் மறைத்துள்ளார் இயக்குநர் பா.இரஞ்சித். சமீபத்தில் வெளியாகிய ’சார்பட்டா’ படத்தில் எம்ஜிஆருக்கும் விளையாட்டுத் துறைக்கும் எதுவுமே தொடர்பில்லை என்பது போல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இத்திரைப்படம் முழுக்க முழுக்க திமுகவின் பிரச்சாரப் படமாகவே எடுக்கப்பட்டுள்ளது.

திரைப் பயணம் தொடங்கி அரசியல் பயணம் வரை விளையாட்டை விடாப்பிடியாய் கைக்கொண்டவர் எம்ஜிஆர். அவர் படங்களை முன்மாதிரியாகக் கொண்டு, ஆயிரக்கணக்கான வீரர்கள் களத்திற்கு வந்து வீரர்கள் ஆகியுள்ளனர். மான்கொம்பு சண்டை, வாள் சண்டை, குத்துச் சண்டை, குதிரையேற்றம் ஒவ்வொரு படத்திலும் விளையாட்டு வீரராகவே வெளிப்படுத்திக் கொண்டவர் எம்ஜிஆர். முக்கியமாக குத்துச்சண்டையை மிகவும் நேசித்த ஒரே அரசியல் தலைவர் எம்ஜிஆர்.

1980ஆம் ஆண்டு தமிழ்நாடு அமெச்சூர் பாக்சர் சங்கத்துக்கான நிதி திரட்டும் வேடிக்கை குத்துச் சண்டையில் பங்கேற்பதாக நாக் அவுட் நாயகன் முகமது அலியை சென்னை அழைத்து வந்தவர் நமது எம்ஜிஆர். போட்டி முடிந்து தன் ராமாவாரம் தோட்டத்திற்கு அழைத்து மீன் குழம்பு பரிமாறினார். அந்த அளவிற்குக் குத்துச்சண்டை மீது காதல் கொண்டிருந்தார் எம்ஜிஆர்.

திரையில் விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த எம்ஜிஆர் முதல்வரான பிறகு விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் எண்ணற்ற சலுகைகள் வழங்கினார். நலிவடைந்த வீரர்களுக்கு அரசின் நிதி அளித்து சர்வதேசப் போட்டிகளில் அவர்களைப் பங்கேற்கச் செய்து அழகு பார்த்தார். ஆனால் 'சார்பட்டா' திரைப்படம் திமுக ஆட்சியில் மட்டுமே விளையாட்டு வீரர்கள், மதிக்கப்பட்டது போலவும் எம்ஜிஆர், அவர்களைக் கைகழுவியது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

கலை என்பது வரலாற்றை விடக் கூர்மையானது. எனவே அதில் உண்மைகள் மறைக்கப்படுவது சம்பந்தப்பட்ட மனிதர்களுக்கு மட்டுமல்ல. வருங்காலத் தலைமுறைக்கே செய்யும் துரோகம் அது. ஆட்சியில் இல்லாத வரை திமுகவை மேடைக்கு மேடை குத்திக்கிழித்த இரஞ்சித் எனும் ஈட்டி, இப்போது மழுங்கிப் போனதன் காரணம் என்னவோ? அதிகாரம் மையம் இடத்தில் அடைக்கலமாக எதிர்க் கட்சியின் மீது புழுதி வாரி தூற்ற வேண்டுமா இரஞ்சித்? சமரசம் செய்து கொள்வது கலைக்கு மட்டும் அல்ல கலைஞனுக்கும் அது அழகல்ல.

எம்ஜிஆர், அவர்களது படங்களில் விளையாட்டு வீரராக ஏற்றுவரும் கதாபாத்திரங்கள் என்னைப் போன்ற எண்ணற்றோருக்கு வீர விளையாட்டுகளின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தியது என்று சொன்னால் மிகையாகாது. எத்தனையோ வீரர்களை ஊக்குவித்த எம்ஜிஆரை ’சார்பட்டா' படத்தில் தவறாகச் சித்திரித்துள்ளது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. மேலும், இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்".

இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x