Published : 24 Jul 2021 12:12 PM
Last Updated : 24 Jul 2021 12:12 PM

ஏ.ஆர்.ரஹ்மானிடம் ரூ.3 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி

இசை நிகழ்ச்சி தோல்வியடைந்ததாகக் கூறி பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானிடம் 3 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் காளியப்பன் என்பவர் 2000ஆம் ஆண்டு பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹமானை வைத்து துபாயில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். ஆனால், இந்த நிகழ்ச்சி வெற்றி பெறவில்லை என்றும், நிகழ்ச்சி நடத்தியதில் நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறி 3 கோடி ரூபாய் நஷ்ட ஈடாக ஏ.ஆர்.ரஹமான் தரவேண்டும் என்றும் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் சிவில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.

அவரது மனுவில், “இசை நிகழ்ச்சியால் நஷ்டம் ஏற்பட்ட நிலையில் இசை நிகழ்ச்சியின் காப்புரிமையைத் தனியார் இசை நிறுவனங்களுக்கு விற்று ஏ.ஆர்.ரஹமான் லாபம் அடைந்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஏ.ஆர்.ரஹ்மான் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நர்மதா சம்பத் நிகழ்ச்சியால் நஷ்டம் ஏற்பட்டதற்கும் தனது கட்சிக்காரருக்கும் சம்பந்தம் இல்லை என்றும், நிகழ்ச்சிக்காகப் பேசிய தொகையைக் கூட மனுதாரர் தரவில்லை என்றும், போலியாக இழப்பீடு கேட்கப்பட்டுள்ளதால் மனுவைத் தள்ளுபடி செய்யவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உமாசங்கர், இந்தப் பிரச்சினை முடிந்துவிட்டதாகத் தெரிவித்திருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, பிரச்சினை முடிந்துவிட்டதா என்பது குறித்து நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பு வழக்கறிஞரிடம் உத்தரவிட்டிருந்தார்.

வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பு வழக்கறிஞர் எந்த சமரசமும் ஏற்படவில்லை என்றும், மனுவைத் தள்ளுபடி செய்யவேண்டும் என்றும் வாதிட்டார்.

மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் உமாசங்கரும், தனக்கு மனுதாரரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை என்று தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிரான நஷ்ட ஈடு வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x