

பணிக் காலத்தில் இறக்கும் அரசு அலு வலர்களுக்கு வழங்கப்படும் குடும்ப நல நிதி, குழு காப்பீட்டுத் தொகை ரூ.3 லட்சமாக உயர்த்தப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சத்துணவுப் பணியாளர்கள், அரசு டாக்டர்கள் ஆகியோருக்கு பல்வேறு சலுகைகளை அவர் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் விதி 110-ன் கீழ் இது தொடர்பாக முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு:
அரசு அலுவலர்கள் தங்களது பணி, ஊதியம், ஓய்வூதியம் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். அதன்படி அரசு அலுவலர் சங்கப் பிரதிநிதிகளுடன் அரசு பேச்சு நடத்தியது. அதன் அடிப்படையில் அரசு அலுவலர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்க முடிவு செய்துள்ளோம்.
குடும்ப நல நிதி ரூ.3 லட்சமாக உயர்வு
கடந்த 40 ஆண்டுகளாக அரசு அலுவலர்களுக்கு குடும்ப நல நிதித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக அவர்களின் சம்பளத்திலிருந்து மாதம் ரூ.30 பிடித்தம் செய்யப்படுகிறது. இத்திட்டத்தின்படி பணிக் காலத்தில் இறக்கும் அரசு அலுவலர்களின் வாரிசுதாரருக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்த நிதி இனி ரூ.3 லட்சமாக உயர்த்தப்படும். இதற்காக அவர்களின் சம்பளத்திலிருந்து மாதம் ரூ.60 பிடித்தம் செய்யப்படும். குடும்ப நல நிதி உயர்த்தப்பட்டுள்ளதால் ஏற்படும் கூடுதல் செலவான ரூ. 6 கோடியை அரசு வழங்கும்.
குழு காப்பீடு ரூ. 3 லட்சமாக உயர்வு
அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள், அலுவலர்கள், சத்துண வுப் பணியாளர்கள், உள்ளாட்சி பணியாளர்கள் ஆகியோருக்கு குழுக் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இlதற்காக அவர்களின் சம்பளத்திலிருந்து மாதம் ரூ.30 பிடித்தம் செய்யப்படுகிறது.
ஆயுள் காப்பீட்டு நிறுவனத்துக்கு சராசரியாக ஆண்டுக்கு ரூ.37 கோடி பிரிமியம் செலுத்தப்படுகிறது. இதில் ரூ.15 கோடி ஊழியர்களிடமிருந்து பெறப்படுகிறது. மீதமுள்ள ரூ.22 கோடியை அரசு வழங்கி வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் காப்பீட்டுத் தொகை ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்திலிருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்படும். இதற்காக அவர்களின் சம்பளத்திலிருந்து ரூ.60 பிடித்தம் செய்யப்படும். காப்பீட்டுத் தொகை உயர்வதால் அரசுக்கு ரூ.20 கோடி கூடுதல் செலவு ஏற்படும்.
1-2-2016 வரை கருணை அடிப் படையில் பணியமர்த்தப்பட்டவர்களின் பணி நியமனம் பொது அரசாணை மூலம் முறைப்படுத்தப்படும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஒப்புதல் பெற வேண்டிய பதவிகளுக்கு அரசாணை வெளியிட்ட பிறகு ஒப்புதல் பெறப்படும்.
விதித் தளர்வு தேவைப்படும் அலுவலர்களுக்கு தேர்வாணையத்தின் ஒப்புதல் பெற்று விதிகளை தளர்வு செய்ய அரசாணைகள் வெளி யிடப்படும். அதுவரை அவர்களை தற்காலிக அரசு அலுவலர்களாகக் கருதி ஆண்டு ஊதிய உயர்வு வழங்கப்படும்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்.