

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது கடந்த 2015-ல் தமிழக ஆளுநரிடம் பாமக அளித்த ஊழல் புகார் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறைகளி்டமிருந்து விளக்கம் பெற்று சட்டப்படி உரிய நட வடிக்கை எடுக்கப்படும் என்று, உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பாமக தலைவர் ஜி.கே.மணி,கடந்த 2015-ம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, பன்னீர்செல்வம் ஆகியோரின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளது.2011-ம் ஆண்டு முதல், அமைச்சராக பதவி வகித்தவர்கள், மூத்த அதிகாரிகள், முதல்வர் என அனைவரும் பாகுபாடின்றி ஊழல் புகாரில் சிக்கியுள்ளனர். இதுதொடர்பாக ஆளுநரிடம் 2013 மற்றும் 2015ஆகிய ஆண்டுகளில் 200 பக்கபுகார் பட்டியலை பாமக வழங்கியது. அதை ஆளுநர், கடந்த 2015-ம்ஆண்டு தலைமைச் செயலருக்கு அனுப்பியும் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’’ என தெரிவித்து இருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுதலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, ‘‘அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக பாமக, ஆளுநரிடம் அளித்த புகார் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறைகளிடம் விளக்கம் பெற்று சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
அதையேற்ற நீதிபதி, வழக்கைமுடித்துவைத்து உத்தரவிட்டார்.