Published : 24 Jul 2021 03:12 AM
Last Updated : 24 Jul 2021 03:12 AM

ரூ.20 லட்சத்துக்கு கீழ் உள்ள அரசு ஒப்பந்தங்களை பெறுகிற புதிய தொழில் நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகள்: ‘டான்சிம்’ கோரிக்கையை ஏற்று தமிழக அரசு அறிவிப்பு

சென்னை

தமிழகத்தில் ரூ.20 லட்சத்துக்கு கீழ் உள்ள அரசு ஒப்பந்தங்களை பெறும் புதிய தொழில் நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகைளை அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து குறு, சிறு, நடுத்தர தொழில்கள் துறை வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசு சார்பில் புதிய தொழில்கள், புது முயற்சிகள் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. இதன் கீழ் அமைக்கப்பட்ட தமிழ்நாடு புதிய தொழில்கள், புது முயற்சிகள் இயக்கத்தின் (டான்சிம்) இயக்குநர், அரசுக்கு கடிதம் எழுதி இருந்தார். அதன் விவரம்:

தமிழகத்தில் புதிதாக தொழில்தொடங்கும் நிறுவனங்களுக்குஅரசு ஒப்பந்தங்களை வழங்குவதில்முன்னுரிமை அளித்தால், அதிகஅளவில் வேலைவாய்ப்புகள் உருவாகும்.

மேலும், அந்த நிறுவனங்களின் தயாரிப்புகளை அரசு கொள்முதல் செய்யும்போது, நிறுவனங்களின் சந்தைப்படுத்தும் சிக்கல் பெருமளவு குறைகிறது.

கேரளா, கர்நாடகா, தெலங்கானா மாநிலங்கள் ஏற்கெனவே இதற்கான உத்தரவுகளை வழங்கியுள்ளன. எனவே, தமிழ்நாடு புதியதொழில்கள், புதிய முயற்சிகள் திட்டத்தில் ‘ஸ்டார்ட்அப் டிஎன்’ இணைய வழி பதிவு செய்தவர்களுக்கு உதவிகளை அரசு வழங்கலாம். இவ்வாறு அக்கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

கட்டணத்தில் விலக்கு

இதை பரிசீலித்த தமிழக அரசு,ரூ.20 லட்சத்துக்கு குறைவான ஒப்பந்தங்களில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கு புதிய சலுகைகள் அளிக்க முடிவெடுத்துள்ளது. அதன்படி, ஒப்பந்தத்தில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கு ஒப்பந்தப் புள்ளி கட்டணம், முன்வைப்புத் தொகை, முந்தைய விற்றுமுதலை காட்டுவது, முந்தைய தொழில் அனுபவம் ஆகியவற்றில் இருந்து விலக்குஅளிக்கப்படுகிறது.

அரசுத் துறை நிறுவனங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், கழகங்கள், உள்ளாட்சிகள், கூட்டுறவு நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு உருவாக்கிய சங்கங்கள் ஆகியவற்றில் இருந்து அந்த நிறுவனங்கள் ஒப்பந்தம் பெறலாம்.

இந்த நிறுவனங்கள் டான்சிம் அல்லது தொழில் மற்றும் உள்ளூர் வர்த்தக ஊக்குவித்தல் துறையில் (டிபிஐஐடி) பதிவு செய்த புதியதொழில் நிறுவனமாக, தமிழகத்தில் பதிவு செய்த நிறுவனமாக இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆதார நிதி ரூ.10 லட்சம்

புதிய தொழில்கள், புதிய முயற்சிகள் இயக்கம் சார்பில் தமிழகத்தில் புதிய தொழில் நிறுவனங்களுக்கான ஆரம்பகட்ட ஆதார நிதியாக (சீட் கிரான்ட்) ரூ.10 லட்சம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் ஜூலை முதல் செப்டம்பர் வரை 20 நிறுவனங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வரை ஆதார நிதி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு ஆகஸ்ட் 20-ம்தேதி வரை www.startuptn.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ஸ்டார்ட்அப் இந்தியா, ஸ்டார்ட்அப் டிஎன் தமிழ்நாடு ஆகியவற்றில் பதிவு செய்த நிறுவனங்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x