Published : 24 Jul 2021 03:12 AM
Last Updated : 24 Jul 2021 03:12 AM

செங்கல்பட்டு, வேலூர், சென்னை அரசு மருத்துவமனைகளில் 19 பேர் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறக்கவில்லை: ஓபிஎஸ் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்

செங்கல்பட்டு, வேலூர், சென்னை அரசு மருத்துவமனைகளில் நிகழ்ந்த 19 பேரின் உயிரிழப்புக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை காரணம் இல்லை என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

கடந்த 21-ம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒருவர்கூட உயிரிழக்கவில்லை என தெரிவித்தார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில், ‘மே 7-ம் தேதி பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், தமிழகம் ஆக்சிஜன் நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாகவும், ஆக்சிஜன் பற்றாக்குறையால் 2 நாள் முன்பு செங்கல்பட்டில் 13 பேர் எதிர்பாராத விதமாக இறந்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இது உண்மையா, அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுவது உண்மையா?’ என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

சென்னையில் நேற்று இதுபற்றிகேட்டபோது, அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:

நான் சொன்னது உண்மைதான்

தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒருவர்கூட இறக்கவில்லை என்று நான் சொன்னதுஉண்மைதான். திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு இல்லை என்றுதான் கூறினேன்.

கடந்த மே 7-ம் தேதி பிரதமருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், ‘தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளது.2 நாட்களுக்கு முன்பு செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவமனையில் 13 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் மே 4-ம் தேதிஇரவு நடைபெற்றுள்ளது. அப்போது, அதிமுக ஆட்சிதான் இருந்தது. அதே அதிமுக ஆட்சியில்தான் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி சென்னைராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 2 பேரும், 19-ம் தேதிவேலூர் அரசு மருத்துவமனையில் 4 பேரும் இறந்துள்ளனர்.

இந்த இறப்புகள் எல்லாம் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நடக்கவில்லை. ஆக்சிஜன் குழாய் பழுதுஉள்ளிட்ட தொழில்நுட்ப பிரச்சினைகளால் இறப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த 3 சம்பவங்களும் அதிமுக ஆட்சியில்தான் நடை பெற்றன. திமுக ஆட்சியில் நடைபெறவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x