

சேலம் மாவட்டத்தில் இந்து சமயஅறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடைபெற்றுவரும் திருப்பணிகளை, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர்சேகர்பாபு, சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
பின்னர் அமைச்சர் சேகர்பாபுகூறியதாவது: மாநிலத்தில் முதல்நிலை கோயில்களாக விளங்கும் 539 கோயில்களில் திருப்பணி, கும்பாபிஷேகம் நடத்த வேண்டியதை ஆய்வு செய்து வருகிறோம். இதன் மூலம் கோயில்களை நந்தவனம், திருத்தேர், தெப்பக்குளம், தலவிருட்சம் வைத்து மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அறநிலையத் துறைக்கு சொந்தமான கோயில்களுக்குரிய 50 ஆயிரம் இடங்களில் வாடகைவசூல் நிலுவையில் உள்ளது. அதைவசூலிக்கவும், கோயில் நில ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நடவடிக்கைஎடுத்துள்ளோம். கோயில் நிலங்களை குத்தகைக்கு விடுவது, வாடகைக்கு விடுவது வெளிப்படைத் தன்மையுடன் மேற்கொள்ளப்படும்.
கோயில்களில் பக்தர்கள் காணிக்கையாக அளித்த தங்கக்காசுகள் கடந்த 9 ஆண்டுகளாக உருக்கப்படாமல் உள்ளன. கோயில் தேவைக்கு போக மீதியுள்ள தங்கக் காசுகளை இந்திய அரசின் அனுமதி பெற்ற ஆலையில் உருக்கி தங்க கட்டிகளாக மாற்றி, வைப்பு நிதியாக வைத்து 2.5 சதவீதம் வட்டி மூலம் ஆண்டுக்கு ரூ.20 கோடி வருவாய் ஈட்டப்படும்.
மேலும் அறநிலையத் துறையில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. அதேபோல, 5 ஆண்டுகளுக்கு மேல் கோயில்களில் தற்காலிக ஊழியர்களாகப் பணியாற்றி வரும் அனைவரையும் பணி நிரந்தரமாக்க முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த வாரத்தில் திருடு போன 6 சிலைகளில் 4 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே உள்ள சிலை திருட்டு, கடத்தல் வழக்குகள் மீது நடவடிக்கை எடுக்கவும், வெளி மாநிலம், வெளிநாடுகளில் உள்ள சிலைகளை மீட்டுவரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சிலை கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்யவும் திட்டம் தீட்டப்பட்டுள்ளது என்றார்.