Published : 24 Jul 2021 03:12 AM
Last Updated : 24 Jul 2021 03:12 AM

குமரியில் விவேகானந்தர் பாறை - திருவள்ளுவர் சிலை இடையே ரூ.37 கோடியில் கடல் மீது தொங்கு பாலம் அமைக்க திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தகவல்

கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறைக்கும், திருவள்ளுவர் சிலைக்கும் இடையே கடல் நடுவே ரூ.37கோடியில் தொங்கு பாலம் அமைக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுஉள்ளதாக, மாநிலப் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்தபொதுப்பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அலுவலர்களின் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறைக்கு படகில் சென்றுவிட்டு, அங்கிருந்து திருவள்ளுவர் சிலைக்கு மீண்டும் படகில் செல்லவேண்டியுள்ளது. இதை தவிர்ப்பதற்காக விவேகானந்தர் பாறையில் இருந்து நேரடியாக திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் வகையில் தொங்குபாலம் அமைக்க திட்டமிடப்பட்டு ரூ.37 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.

இங்கு கடலுக்கு நடுவே பாலம் அமைக்க வேண்டியிருப்பதால் சென்னை ஐஐடி பேராசிரியர்களின் கருத்துகளையும் கேட்டுள்ளோம். இப்பாலப் பணிகளை விரைந்து முடித்து, திறப்பு விழாவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை அழைக்க உள்ளோம்.

தமிழகத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊராட்சி ஒன்றிய சாலைகள் மாநில நெடுஞ்சாலைகளுக்கு நிகராக தரம் உயர்த்தப்படும். திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரிமாவட்டங்களில் நகர்ப் பகுதிகளில்நெரிசலை தவிர்க்கும் வகையில்புறவழிச் சாலைகளை அமைக்கமுன்னுரிமை அளிக்கப்படும். திருநெல்வேலியில் விரைவில் புறவழிச் சாலை அமைக்கப்படும்.

சாலையோரங்களில் மரங்கள்நட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. தொழிற்சாலைகளின் உள்ளூர் வளர்ச்சிதிட்ட நிதியில் இருந்து, சாலையோரங்களில் மரங்கள் நடும் திட்டத்துக்கு நிதி ஒதுக்க தொழிற்சாலை நிர்வாகங்களை வலியுறுத்துமாறு, மாநில தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. அவரும், துறை அதிகாரிகளிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருக்கிறார்.

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் சிறப்பு விருந்தினர்கள் தங்க, சுற்றுலா மாளிகைஅமைக்க வேண்டும் என்ற கோரிக்கை, முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும். சாலைகள் அமைக்க காலதாமதம் ஏற்படுவதை தவிர்க்க, நிலஎடுப்பு பணிகளுக்காக சிறப்பு அதிகாரிகளை நியமிக்க முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x