

திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா கடந்த செப்டம்பர் 18-ம் தேதி மர்மமான முறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து திருச்செங்கோடு போலீஸார் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி விஷ்ணுபிரியாவின் தந்தை எம்.ரவி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை நீதிபதி ஆர்.சுப்பையா ஏற்கெனவே தள்ளுபடி செய்தார்.
இந்நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து ரவி மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நேற்று நீதிபதிகள் சதீஷ் கே.அக்னிகோத்ரி, எம்.வேணுகோபால் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள், இதுகுறித்து தமிழக அரசின் முதன்மை செயலாளர், உள்துறைச் செயலாளர், டிஜிபி, சிபிசிஐடி எஸ்பி ஆகியோர் 2 வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.