செல்வமகள் சேமிப்பு திட்டம்: ஊடகங்களில் வெளியான தகவலுக்கு விளக்கம்

செல்வமகள் சேமிப்பு திட்டம்: ஊடகங்களில் வெளியான தகவலுக்கு விளக்கம்
Updated on
1 min read

செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் மதிப்புக் குறித்து ஊடகங்களில் வெளியான தவறான தகவல்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மத்திய பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

செல்வ மகள் சேமிப்புக் கணக்கில் முன்பே நிர்ணயிக்கப்பட்ட முதிர்வு மதிப்பு ஏதும் இல்லை என்று நாக்பூரில் உள்ள மத்திய அரசு நிதி அமைச்சகத்தின் தேசிய சேமிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இந்தக் கணக்கில் முதிர்வு நிலையின் போது கிடைக்கும் தொகை கணக்கில் செலுத்தப்படும் தொகை மற்றும் கணக்கின் காலத்தை அடிப்படையாகக் கொண்டது.

இந்தக் கணக்கு வைத்திருக்கும் பெண் குழந்தைக்கு கணக்குத் தொடங்கப்பட்ட தேதியில் இருந்து 21 ஆண்டுகள் நிறைவடையும் போதோ அல்லது அந்தப் பெண் திருமணம் செய்து கொள்ளும் போதோ இவை இரண்டில் எது முன்னதாக நிகழ்கிறதோ அப்போது முதிர்வுத் தொகை வழங்கப்படும். திருமணம் செய்து கொள்ளும் போது அப்பெண்ணுக்கு 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.

கணக்கு வைத்திருக்கும் பெண் குழந்தைக்கு 18 வயது நிரம்பும் போது அவரது கல்விச் செலவுக்கோ அல்லது திருமணச் செலவுக்கோ ஒருமுறை கணக்கில் இருந்து பணம் பெறலாம். இவ்வாறு பெறும் பணத்திற்கு உச்சவரம்பு நிலுவையில் இருக்கும் தொகையில் 50 சதவீதமாகும். பணம் வாங்கும் தேதிக்கு முந்தைய நிதி ஆண்டின் இறுதியில் நிலுவையில் இருக்கும் தொகையில் பாதி வழங்கப்படும்.

இத்திட்டத்தின் முதிர்வு மதிப்புக் குறித்து சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் அளிக்கப்பட்டு வருவதைக் கருத்தில் கொண்டு இந்த விளக்கம் அளிக்கப்படுகிறது.

இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in