287 தமிழர்கள் விடுதலைக்கு திமுக எடுத்த நடவடிக்கைகளே காரணம்: ஸ்டாலின்

287 தமிழர்கள் விடுதலைக்கு  திமுக எடுத்த நடவடிக்கைகளே காரணம்: ஸ்டாலின்
Updated on
2 min read

ஆந்திர சிறைகளில் இருந்து 287 தமிழர்களையும் மீட்க தலைவர் கருணாநிதியின் ஆலோசனையின்படி, திமுக வழக்கறிஞர் அணியினர் எடுத்த நடவடிக்கைகளே காரணம் என்று அக்கட்சியின் பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் முகநூலில் வெளியிட்ட பதிவில், ''விழுப்புரம் மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியைச் சேர்ந்த தமிழர்கள் 289 பேர் ஆந்திர மாநில வனத்துறையால் 2013 ஆம் வருடம் கைது செய்யப்பட்டு ஜாமீனில் கூட வெளிவர முடியாமல் அம்மாநில சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தார்கள். தங்களின் சொந்தங்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக முதல்வருக்கு 22.7.2015 அன்றே கடிதம் அனுப்பினார்கள்.

ஆனால், அதிமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சிறைகளில் வாடும் தமிழர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்காததோடு மட்டுமின்றி, 27.7.2015 அன்று பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல்வர் அலுவலகத்திலிருந்து அனுப்பிய பதில் கடிதத்தில், “நீங்கள் ஆந்திர மாநில இலவச சட்ட உதவி மையத்தை அணுகுங்கள்” என்று கூறி அதிமுக அரசு தன் பொறுப்பை தட்டிக் கழித்து விட்டது. தமிழக அரசு கைவிட்டது பாதிக்கப்பட்ட அந்த குடும்பங்களின் இதயத்தில் இடி போல் இறங்கியது.

சிறையில் அடைக்கப்பட்டோரின் குடும்பங்கள் வறுமையின் கோரப் பிடியில் சிக்கி நிலைகுலைந்து நின்ற நிலையில், நமக்கு நாமே பயணத்தின் ஒரு பகுதியாக நான் கல்வராயன் மலைப் பகுதிக்குச் சென்றேன். ஆந்திர சிறைச்சாலைகளில் வாடும் தமிழர்களின் குடும்பங்களைச் சார்ந்தவர்கள் அனைவரும் தங்கள் உறவினர்களை எப்படியாவது மீட்டுத் தரும்படி என்னிடம் கண்ணீரும் கம்பலையுமாக அப்போது முறையிட்டார்கள்.

குடும்பத் தலைவர்களையும், சொந்தங்களையும் சிறைகளில் தவிக்க விட்டு, தாய்மார்கள் கண்ணீர் சிந்திக் கொண்டிருந்த அந்த பரிதாபமான நிலையைப் பார்த்து பதறிய நான், “ஆந்திர மாநில சிறையில் உள்ளவர்களை மீட்க திமுக வழக்கறிஞர் அணி மூலம் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று வாக்குறுதியளித்தேன். அதைத் தொடர்ந்து தலைவர் கருணாநிதியை சந்தித்து கல்வராயன் மலைப்பகுதியில் வசிக்கும் தமிழர்களின் துயரங்களை எடுத்துக் கூறினேன். “ஆந்திர சிறையில் வாடும் தமிழர்களை திராவிட முன்னேற்றக் கழக வழக்கறிஞர் அணி மூலம் நடவடிக்கை எடுத்து உடனடியாக மீட்க வேண்டும்” என்று கருணாநிதி உத்தரவிட்டார்.

தலைவர் கருணாநிதியின் உத்தரவின் பேரில் கழக சட்டத்துறை இணைச் செயலாளர் கண்ணதாசன் தலைமையில் 24 பேர் கொண்ட வழக்கறிஞர் குழு அமைக்கப்பட்டது. இந்த வழக்கறிஞர் குழுவினர் உடனடியாக ஆந்திர மாநிலத்திற்கு விரைந்தனர். அங்கு சிறைகளில் வாடும் தமிழர்களை சந்தித்து அவர்களை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தார்கள். சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழர்கள் அனைவரும் ஜாமீனில் வெளிவருவதற்கே மனு செய்திருந்தாலும், கழக வழக்கறிஞர்கள் தீவிரமாக பணியாற்றி, அவ்வப்போது தலைவர் கருணாநிதியின் அறிவுரைகளையும் கேட்டு அனைத்து நடவடிக்கைகளையும் துரித கதியில் எடுத்தார்கள்.

வழக்கை துரிதப்படுத்த கழகம் மேற்கொண்ட இந்த தீவிர நடவடிக்கையின் விளைவாக ஆந்திர சிறைகளில் வாடிய தமிழர்கள் 287 பேரும் இன்றைய தினம் வழக்கிலிருந்தே விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள் என்ற இனிப்புச் செய்தியை கழக வழக்கறிஞர்கள் தலைவர் கருணாநிதியிடம் தெரிவித்தார்கள்.

இரண்டு வருடத்திற்கும் மேலாக ஆந்திர சிறைகளில் வாடிய தமிழர்கள் அவரவர் குடும்பத்தினருடன் இணைய இருக்கிறார்கள் என்ற மகிழ்ச்சிக்குரிய செய்தி, பாதிக்கப்பட்ட அந்த குடும்பங்களின் வாழ்வில் நிம்மதி பிறக்க வைக்கும் என்று கருதுகிறேன்.

தமிழர்கள், தமிழர்கள் நலன் என்றாலே அதிமுக அரசுக்கு எப்போதும் கவலையில்லை. 20 தமிழர்கள் ஆந்திர காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் சிபிஐ விசாரணை கேட்டுக் கூட தமிழக அரசு இதுவரை ஒரு கடிதம் எழுதவில்லை. ஆந்திர சிறையில் வாடிய தமிழர்களை மீட்கவும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாதிக்கப்பட்ட குடும்பங்கள் முதல்வர் தனிப்பிரிவிற்கு முறையிட்ட போது “நீங்கள் ஆந்திர இலவச சட்ட உதவி மையத்திற்கு போங்கள்” என்று விரட்டி அடித்து ஈவு இரக்கமற்ற முறையில் அதிமுக அரசு நடந்து கொண்டது. ஆனால், இப்போது தமிழர்கள் விடுதலைக்கு அதிமுக அரசு உதவி செய்தது போல் நீலிக்கண்ணீர் வடிக்கிறது.

287 தமிழர்களையும் சிறைகளில் இருந்து மீட்க திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவர் கருணாநிதியின் ஆலோசனையின்படி, கழக வழக்கறிஞர் அணியினரும் எடுத்த நடவடிக்கைகளை கல்வராயன் பகுதி மக்கள் மிக நன்றாகவே உணருவார்கள்.

287 தமிழர்களை மீட்க அயராமல் பாடுபட்ட கழக வழக்கறிஞர் அணிக்கு இந்த நேரத்தில் என் பாராட்டுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதே நேரத்தில் விடுதலையாகி வருவோர் தங்கள் வாழ்க்கையை மீண்டும் தொடங்குவதற்கு தமிழக அரசு தேவையான நிதியுதவி செய்ய வேண்டும்'' என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in