Published : 24 Jul 2021 03:13 AM
Last Updated : 24 Jul 2021 03:13 AM

நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் காவிரி, கொள்ளிடத்தில் தடுப்பணைகள்: திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கே.என்.நேரு தகவல்

நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் பல இடங்களில் தடுப்பணை அமைக்க திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

திருச்சி முக்கொம்பு மேலணையின் கொள்ளிட பகுதியில் ரூ.387 கோடி செலவில் புதிய கதவணை கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை அமைச்சர் கே.என்.நேரு நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் அளித்த பேட்டி:

புதிய கதவணைக் கட்டுமான பணிகள் செப்டம்பர் மாதத்துக்குள் முடிவடையும். இங்கிருந்து வண்ணத்துப்பூச்சி பூங்கா வரை செல்லக்கூடிய காவிரிக் கரை சாலை பணிகள் டிசம்பர் மாதத்துக்குள் நிறைவுபெறும்.

ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுவதற்கான முன்மொழிவை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இதன்படி திருச்சி மாவட்டத்தில் காவிரி, கொள்ளிடம் ஆறுகளின் குறுக்கே பல இடங்களில் கதவணை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இடங்களில் நீரைத் தேக்கி வைத்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையிலும், ஆற்றின் இரு கரைகளையும் இணைத்து வாகன போக்குவரத்துக்கு வழி செய்யும் வகையிலும் இந்த தடுப்பணைகள் அமையும். எந்தெந்த இடங்களில் அமைப்பது என்பது குறித்து ஆட்சியர் ஆய்வு செய்து வருகிறார்.

காவிரி ஆற்றில் கம்பரசம்பேட்டை பகுதியிலுள்ள தடுப்பணையிலும் போக்குவரத்து வசதி ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

ஆய்வின்போது ஆட்சியர் சு.சிவராசு, எம்எல்ஏக்கள் சவுந்தரபாண்டியன், பழனியாண்டி, காடுவெட்டி ந.தியாகராஜன், முன்னாள் துணை மேயர் அன்பழகன், பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் கீதா, உதவி செயற்பொறியாளர் ஜெயராமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

சுகாதார மாவட்டம் 2-ஆக பிரிப்பு

முன்னதாக மரவனூரில் குழந்தைகளுக்கு பி.சி.வி தடுப்பூசி போடும் பணிகளை அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

அப்போது கே.என்.நேரு செய்தியாளர்களிடம் கூறும்போது, “திருச்சி மாவட்டம் முழுவதும் இதுவரை ஒரு சுகாதார மாவட்டமாக மட்டும் இருந்து வந்தது. இதை இரண்டாக பிரித்து, முசிறியை தலைமையிடமாகக் கொண்டு புதிய சுகாதார மாவட்டம் உருவாக்கப்படுகிறது. 6 ஒன்றியங்கள் இதில் இணைக்கப்படுகின்றன.

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு சோதனையை பழிவாங்கும் நடவடிக்கை என அதிமுகவினர் கூறியுள்ளனர். அவர்கள் அப்படித்தான் கூறுவார்கள்.

கடந்த ஆட்சிக்காலத்தில் எங்கள் மீது இதுபோல வழக்கு போடவில்லையா?’’ என்றார்.

வன உயிரியல் பூங்கா பணி விரைவில் தொடங்கும்

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் எம்.ஆர்.பாளையம் அருகே கடந்த திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட வன உயிரியல் பூங்கா பணிகள் பாதியிலேயே நிற்கின்றன. இந்நிலையில், வரக்கூடிய பட்ஜெட் தொடரில் இத்திட்ட பணிகளுக்குத் தேவையான நிதியை ஒதுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து வருகிறது. இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழில் நேற்று செய்தி வெளியானது.

இதுகுறித்து முக்கொம்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் கே.என்.நேரு கூறும்போது, ‘‘திருச்சி வன உயிரியல் பூங்காவைப் திறப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். இத்திட்ட பணிகள் குறித்து வன அதிகாரிகள் என்னிடம் தெரிவித்துள்ளனர். வனத்துறை அமைச்சரிடம் பேசி உள்ளோம். பூங்கா பணிகள் விரைவில் தொடங்க உள்ளன’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x