

6-வது முறையாக கருணாநிதி முதல்வராக பதவியேற்பார் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று நடைபெற்ற திமுக பிரமுகர் பாலவாக்கம் சோமு இல்ல திருமண விழாவில் அவர் பேசியதாவது:
தமிழகத்தில் இன்று அனைத்து மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்சி திமுக மட்டுமே. அதிமுக அரசின் செயலற்ற தன்மையால் தமிழ கத்தில் அரசு இருப்பதாகவே தெரியவில்லை. இந்த ஆட்சியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர் கள், விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய உரிமைகளுக்காக போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அரசின் மீது வெறுப்படைந்துள்ள மக்கள் ஆட்சி மாற்றத்துக்கு தயாராகிவிட்டனர். இன்னும் 3 மாதங்களில் ஆட்சி மாற்றம் நிகழப்போகிறது. வரும் தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைப்பது உறுதி. திமுக தலைவர் கருணாநிதி 6-வது முறையாக தமிழகத்தின் முதல்வராக பதவியேற்பார். இதில் எந்த சந்தேகமும் இல்லை.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
திமுக மாநிலங்களவை குழுத் தலைவர் கனிமொழி, முதன்மைச் செயலாளர் துரைமுருகன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித் தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்டோர் திருமண விழாவில் பங்கேற்றனர்.