

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த நாயக்கநேரி மலைகிராமத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி காமராஜ்(26). இவருக்கும், அதேபகுதியைச் சேர்ந்த ஷோபா (22) என்பவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஷோபாவுக்கும் வடமாநில இளம்பெண் ஒருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த வாரம் ஷோபாவை தேடி வடமாநில இளம்பெண் ஆம்பூர் அடுத்த நாயக்கனேரி மலைகிராமத்துக்கு வந்துள்ளார். அங்கு காமராஜ் வீட்டில் 2 நாட்கள் தங்கிய வடமாநில இளம்பெண் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சொந்த ஊர் திரும்புவதாக கூறினார். அவரை வழியனுப்ப காமராஜ் தனது மனைவி ஷோபாவுடன் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்துக்கு சென்றார். ரயில் புறப்படும் நேரத்தில் தண்ணீர் பாட்டில் வேண்டும் என வடமாநில இளம்பெண் காமராஜிடம் கேட்டார். உடனே, அருகேயுள்ள கடைக்கு சென்று திரும்புவதற்குள்ளாக ரயில் அங்கிருந்து புறப்பட்டது. அப்போது நடைமேடையில் நின்றிருந்த ஷோபா மாயமானது தெரியவந்தது. இது குறித்து ரயில்வே காவல் நிலையத்தில் காமராஜ் புகார் அளித்தார்.
அதன்பேரில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், ஷோபாவும், வடமாநில இளம்பெண்ணும் கொல்கொத்தாவில் இருப்பது தெரியவந்தது. இந்நிலையில், ஷோபாவை மீட்க ரயில்வே காவல் துறையினர் தனிப்படை அமைத்து கொல்கொத்தாவுக்கு நேற்று விரைந்துள்ளனர்.