

ரயில்வே பட்ஜெட்டை கண்டித்து மார்ச் 1-ம் தேதி தெற்கு ரயில்வே முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் (டிஆர்இயு) அறிவித்துள்ளது.
இது தொடர்பாக டிஆர்இயு பொதுச் செயலாளர் அ.ஜானகிராமன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மத்திய ரயில்வே பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. பட்ஜெட்டில் குறிப்பிட்டுள்ள பல்வேறு திட்டங்கள் தனியார்துறை பங்களிப்புடன் அந்நிய நேரடி முதலீடு மூலமாகவும் வரும் என கூறப்பட்டுள்ளது. காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு எந்த அறிவிப்பும் இல்லை, ரூ.40 ஆயிரம் கோடி செலவில் இரண்டு லோக்கோ தொழிற்சாலை அந்நிய நேரடி திட்டங்களாக இருக்கிறது.
ஏற்கனவே அறிவித்த பயோ டாய்லெட், 400 ரயில் நிலையங்களில் வைபை வசதி ஆகியவை முழுமையாக அமலாக்கவில்லை. 7வது சம்பளக் கமிஷன் அமுலாக்கத்திற்கு வேண்டிய கூடுதல் தொகையை மத்திய அரசு ரயில்வேக்கு ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி வரும் மார்ச் 1-ம் தேதி தெற்கு ரயில்வே அலுவலகங்கள் முழுவதும் ஆர்பாட்டம் நடத்தவுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.