Published : 23 Jul 2021 06:44 PM
Last Updated : 23 Jul 2021 06:44 PM

பேருந்துகளில் பயணிக்கும் போலீஸார் கட்டாயம் டிக்கெட் எடுக்க வேண்டும்: டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

அரசுப் போக்குவரத்து பேருந்தில் பயணிக்கும் போலீஸார் டிக்கெட் எடுக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

அரசுப் பேருந்து நடத்துநருக்கும், காவலருக்கும் டிக்கெட் எடுப்பதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் நடத்துநர் மாரடைப்பால் உயிரிழந்த விவகாரத்தில், மனித உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் டிஜிபி சைலேந்திரபாபு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருச்சியிலிருந்து கடலூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில் சீருடை அணியாமல் பயணம் செய்த காவலர் டிக்கெட் எடுக்காமல் நடத்துநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதில், நடத்துநர் மயங்கி விழுந்தார். பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நடத்துநருக்கு மாரடைப்பு ஏற்பட்டது தெரியவந்தது. சிகிச்சைப் பலனளிக்காமல் நடத்துநர் உயிரிழந்ததால் விவகாரம் பெரிதானது.

மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. பொதுவாக காவலர்கள் அரசுப் பேருந்தில் பணி நிமித்தமாகப் பயணம் செய்யும்போது டிக்கெட்டுக்கு பதில் வாரண்ட் உள்ளது என்று சொன்னால் அதை நடத்துநர் கணக்கில் எடுத்துக்கொள்வார். பின்னர் காவல்துறைக்கு அனுப்பப்படும் மொத்த ரசீது மூலம் பணம் வசூலிக்கப்படும்.

இதில் போலீஸார் சொந்த வேலையாகச் செல்லும்போதும், சீருடை அணியாமல் செல்லும்போதும் நடத்துநர்களிடம் போலீஸ் எனக் கூறுவார்கள். நடத்துநரும் கண்டுகொள்ள மாட்டார். அன்றும் அதுபோல் நடக்கும் எனக் காவலர் நினைக்க, மாறாக வாக்குவாதம் முற்றியுள்ளது. வாரண்ட்டும் இல்லாமல், சீருடையுடனும் இல்லாமல் டிக்கெட் எடுக்க மறுத்து காவலர் பேருந்தின் நடத்துநரிடம் வாக்குவாதம் செய்ததே நடத்துநருக்கு மாரடைப்பு வரவும், உயிரிழக்கவும் காரணமாக அமைந்தது.

இதன் அடிப்படையில் மனித உரிமை ஆணையம் சில உத்தரவுகளைப் பிறப்பித்தது. அது காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டது. அதன் அடிப்படையில், அரசு உத்தரவின் பேரில் உள்துறை பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், சட்டம்- ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு அனைத்துப் பிரிவுக் காவலர்களுக்கும் பொதுவாக ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்.

“இனி வரும் காலங்களில் மேற்கண்ட மோதல் போக்குச் சம்பவம் போல் நிகழாமல் இருக்க அரசுப் பேருந்துகளில் வாரண்ட் இல்லாமல் பயணம் செய்யும் போலீஸார் முறைப்படி டிக்கெட் எடுக்க வேண்டும். மாநில மனித உரிமை ஆணைய வழிகாட்டுதல், உத்தரவை அனைத்து போலீஸாரும் கடைப்பிடிப்பதை அந்தந்தத் துறை அதிகாரிகள் உறுதிப்படுத்திட வேண்டும்” என டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x