மதுரை காமராஜ் பல்கலை.க்கு உட்பட்ட கல்லூரிப் படிப்புகளுக்கான இணைவிப்புக் கட்டண உத்தரவு ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை காமராஜ் பல்கலை.க்கு உட்பட்ட கல்லூரிப் படிப்புகளுக்கான இணைவிப்புக் கட்டண உத்தரவு ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கல்லூரிகளில் பட்டப் படிப்புகளுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் இணைவிப்புக் கட்டணம் செலுத்த வேண்டும் எனப் பல்கலைக்கழகப் பதிவாளர் 2016-ல் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட தனியார் கல்லூரிகள் சங்கம் சார்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

”மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கல்லூரிகளில் கற்பிக்கப்படும் சுயநிதி பட்டப் படிப்புகளுக்கான இணைவிப்புக் கட்டணமாக ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இணைவிப்புக் கட்டண பாக்கியை 31.7.2016-க்குள் செலுத்த பல்கலைக்கழகப் பதிவாளர் 2016 ஜூலை 1-ல் உத்தரவிட்டுள்ளார். இணைவிப்புக் கட்டணம் பல்கலைக்கழகச் சட்டப்படி நிர்ணயம் செய்யப்படவில்லை.

பல்கலைக்கழக வேந்தரான ஆளுநரிடம் ஒப்புதல் பெறவில்லை. எனவே, இணைவிப்புக் கட்டணத்தைச் செலுத்துமாறு பதிவாளர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்”.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி வி.பார்த்திபன், ”பல்கலைக்கழகம் சார்பில், இணைவிப்புக் கட்டணம் 2006-ல் முடிவு செய்யப்பட்டது. அதை எதிர்த்து வழக்குத் தொடரவில்லை. தமிழகத்தில் பிற பல்கலைக்கழகங்களை ஒப்பிடுகையில் மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் இணைவிப்புக் கட்டணம் குறைவாக உள்ளது. இணைவிப்புக் கட்டணம் நிர்ணயம் செய்வதில் பல்கலைக்கழக வேந்தரிடம் ஒப்புதல் பெறுவது கட்டாயம் அல்ல” என்றார்.

மேலும், ”இணைவிப்புக் கட்டண நிர்ணயம் செய்ததை மறுபரிசீலனை செய்யுமாறு கல்லூரிகள் சார்பில் பல முறை கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அந்தக் கோரிக்கை பரிசீலிக்கப்படவில்லை. இணைவிப்புக் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டதற்கு பல்கலைக்கழக வேந்தரிடம் அனுமதி பெறவில்லை. எனவே, ஒவ்வொரு பட்டப் படிப்புக்கும் ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் இணைவிப்புக் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற மதுரை காமராஜ் பல்கலைக்கழகப் பதிவாளரிடம் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது” என்று நீதிபதி உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in