

நாடு முழுவதும் பொருந்தக்கூடிய தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்குகளை டெல்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வில்தான் பட்டியலிட வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதற்கும் பொருந்தக்கூடிய அல்லது இரு மாநிலங்களுக்கு இடையிலான சுற்றுச்சூழல் விவகாரங்கள் தொடர்பாக பசுமைத் தீர்ப்பாய முதன்மை அமர்வு தாமாக முன்வந்து (சூமோட்டோ) விசாரணைக்கு எடுக்கப்படும் வழக்குகளை டெல்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வில் பட்டியலிட வேண்டும் என, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு கடந்த ஜூன் 12ஆம் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி மீனவர் தந்தை செல்வராஜ்குமார் மீனவர் நலச் சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டது.
அந்தப் பொதுநல வழக்கு மனுவில், “சுற்றுச்சூழல் தொடர்பான குறைகளுக்கு மக்கள் நிவாரணம் பெறுவதற்காக நாடு முழுவதும் ஐந்து அமர்வுகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு பிறப்பித்துள்ள இந்த உத்தரவு, தென்மாநில மக்கள் நீதி பெறுவதில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இந்த உத்தரவு காரணமாக குடிமக்கள், டெல்லிக்குப் பயணப்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தேசிய பசுமைத் தீர்ப்பாயச் சட்டங்களுக்கு விரோதமானது என்பதால், இந்த உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும்” எனக் கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, ஜூலை 30ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வுக்கும், மத்திய அரசுக்கும் உத்தரவிட்டு, விசாரணையைத் தள்ளிவைத்தது.