மாங்கனித் திருவிழா விடையாற்றி உற்சவத்தையொட்டி கைலாசநாதர் கோயிலில் பஞ்சமூர்த்திகளுடன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கும் பிச்சாண்டவர்.
மாங்கனித் திருவிழா விடையாற்றி உற்சவத்தையொட்டி கைலாசநாதர் கோயிலில் பஞ்சமூர்த்திகளுடன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கும் பிச்சாண்டவர்.

காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழா விடையாற்றி உற்சவம்

Published on

காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழாவின் விடையாற்றி உற்சவம் இன்று (ஜூலை 23) நடைபெற்றது.

அடியாராக இருந்து இறைவனுக்கு இணையாகப் போற்றப்பட்டவரும், 63 நாயன்மார்களில் சிறப்பிடம் பெற்றவரும், சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்டவருமான புனிதவதியார் எனும் காரைக்கால் அம்மையாருக்கு காரைக்காலில் தனிக் கோயில் உள்ளது. அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில், காரைக்கால் கைலாசநாத சுவாமி, நித்ய கல்யாணப்பெருமாள் வகையறா தேவஸ்தானத்துக்குட்பட்ட அம்மையார் கோயிலில் ஆண்டுதோறும் மாங்கனித் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.

மிகவும் விமரிசையான வகையில் நடத்தப்படும் இவ்விழா கடந்த ஆண்டைப் போலவே, நிகழாண்டும் கரோனா பரவல் சூழல் காரணமாக கைலாசநாதர் கோயில் வளாகத்துக்குள்ளேயே நடத்தப்பட்டது. முக்கிய நிகழ்வுகளில் மட்டும் உரிய கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

அதன்படி கடந்த ஜூன் 21-ம் தேதி மாப்பிள்ளை அழைப்பு, 22-ம் தேதி அம்மையார் திருக்கல்யாணம், 23-ம் தேதி பிச்சாண்டவர், பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. மாங்கனித் திருவிழாவின் மிகச் சிறப்பு பெற்ற நிகழ்வான பக்தர்கள் மாங்கனிகளை வாரி இறைத்து இறைவனை வழிபடும் பிச்சாண்டவர் வீதியுலா, கோயில் வளாகத்துக்குள்ளேயே பிரகார உலாவாக 24-ம் தேதி நடைபெற்றது. 25-ம் தேதி அம்மையாருக்கு சிவபெருமான் காட்சி கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.

மாங்கனித் திருவிழா விடையாற்றி உற்சவத்தையொட்டி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கும் காரைக்கால் அம்மையார்
மாங்கனித் திருவிழா விடையாற்றி உற்சவத்தையொட்டி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கும் காரைக்கால் அம்மையார்

விழாவையொட்டி ஒரு மாத காலம் நாள்தோறும் அம்மையாருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனைகள் செய்யப்பட்டன. அம்மையார் மணி மண்டபத்தில் தினமும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள் நடத்தப்படுவது வழக்கம். நிகழாண்டு கரோனா சூழல் காரணமாக கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படவில்லை.

மாங்கனித் திருவிழாவின் நிறைவாக இன்று விடையாற்றி உற்சவம் நடைபெற்றது. இதனையொட்டி காலை அம்மையாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மதியம் கைலாசநாதர் கோயிலில் பிச்சாண்டவர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கும் பிச்சாண்டவர்
சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கும் பிச்சாண்டவர்

இந்நிகழ்வுகளில் கைலாசநாதர் கோயில், நித்யகல்யாணப் பெருமாள் வகையறா தேவஸ்தான அறங்காவல் வாரியத் தலைவர் ஆர்.ஏ.ஆர்.கேசவன், துணைத் தலைவர் பி.ஏ.டி.ஆறுமுகம், செயலர் எம்.பக்கிரிசாமி, பொருளாளர் டி.ரஞ்சன் கார்த்திகேயன், உறுப்பினர் கே.பிரகாஷ், உபயதாரர்கள், சிவாச்சார்யார்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இன்று இரவு அம்மையார் கோயிலிலிருந்து வழக்கமாக நடைபெறும் அம்மையார் வீதியுலாவுக்கு பதிலாக கைலாசநாதர் கோயில் பிரகாரத்தில் அம்மையார் உலா நடைபெறுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in