Published : 23 Jul 2021 03:22 PM
Last Updated : 23 Jul 2021 03:22 PM

மத்திய அரசிடமிருந்து ஜிஎஸ்டி வரி இழப்பீட்டுத் தொகையை விரைந்து பெற வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

முதல்வர் ஸ்டாலின்: கோப்புப்படம்

சென்னை

வணிகவரி மற்றும் பதிவுத்துறை வரி வருவாய் இலக்கினை முழுவதும் எய்திட முனைப்புடன் செயல்பட வேண்டும் என, வணிகவரி மற்றும் பதிவுத்துறை ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (ஜூலை 23) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், வணிகவரி மற்றும் பதிவுத்துறையின் செயல்பாடுகள் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

வணிகவரி மற்றும் பதிவுத்துறை வரி வருவாய் இலக்கினை முழுவதும் எய்திட முனைப்புடன் செயல்பட வேண்டும் என்றும், நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி வரி இழப்பீட்டுத் தொகையினை மத்திய அரசிடமிருந்து விரைந்து பெற்றிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் முதல்வர் கேட்டுக்கொண்டார்.

வணிகவரி மற்றும் பதிவுத்துறை குறித்த புகார்களைத் தெரிவிக்கும் பொருட்டு அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை வாயிலாகப் பெறப்படும் வணிகர்கள் மற்றும் பொதுமக்களின் புகார்கள் எவ்விதத் தொய்வுமின்றித் தீர்வு காணப்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

பொதுமக்களுக்கு நல்ல பல திட்டங்களைச் செயல்படுத்த வரி வருவாயானது அத்தியாவசியமனது என்பதால், வரி ஏய்ப்பு நடவடிக்கைகளை உடனுக்குடன் கண்காணித்து அரசுக்குச் செலுத்தப்பட வேண்டிய வரியினை வசூலிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு முதல்வர் கேட்டுக்கொண்டார்.

வணிகர் நல வாரியம் சீரிய முறையில் செயல்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்றும், வணிகர் நல வாரியத்தில் வணிகர்கள் உறுப்பினராகி அதன் சேவைகளைப் பெறுவதற்குத் துறை அலுவலர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

பதிவுத்துறையில் ஒவ்வொரு சார்பதிவாளர் அலுவலகத்திலும் உள்ள ஆவண தொகுதிகளைக் கணினியில் பதிவுசெய்தல் குறித்து முதல்வர் கேட்டறிந்தார். இதன் மூலம், இப்பணிகள் முடிவடைந்த பின்பு பொதுமக்கள் இணைய வழியாக ஆவணங்களின் சான்றிட்ட நகல்களைப் பெறுவதற்கு வழிவகை செய்யப்படுவதோடு, பட்டா மாறுதல் செய்யும்போது தொடர்புடைய ஆவணங்களை வருவாய்த் துறையினர் இணைய வழியாகப் பார்வையிடவும் இயலும்.

பத்திரப்பதிவு அலுவலகங்களின் சேவையானது மக்களுக்கு ஏற்றவகையில் எளிதானதாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் அமைய வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தினார்.

வணிகவரி மற்றும் பதிவுத்துறையின் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும், நிதி ஒதுக்கீடு மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் முதல்வர் ஆய்வு மேற்கொண்டார்".

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x