அனுமதி பெறாமல் கட்டப்படும் கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகம்: அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

அனுமதி பெறாமல் கட்டப்படும் கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகம்: அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
Updated on
1 min read

உரிய அனுமதிகளைப் பெறாமல் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறி, தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு, வீரசோழபுரம் என்னுமிடத்தில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான இடத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது.

கோவில் நிலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டத் தடை கோரி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், உரிய அனுமதிகளையும், ஒப்புதலையும் பெற்றபின் கட்டுமானப் பணிகளைத் தொடரலாம் என உத்தரவிட்டது.

ஆனால், எந்த அனுமதியும் பெறாமல் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறி, தமிழக அரசுக்கு எதிராக ரங்கராஜன் நரசிம்மன், நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்பாக விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in