Published : 23 Jul 2021 13:48 pm

Updated : 23 Jul 2021 13:48 pm

 

Published : 23 Jul 2021 01:48 PM
Last Updated : 23 Jul 2021 01:48 PM

திமுக அரசுக்கு எதிராக 28-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்: ஓபிஎஸ் - ஈபிஎஸ் அறிவிப்பு

aiadmk-announces-protest-against-dmk-government
ஈபிஎஸ் - ஓபிஎஸ்: கோப்புப்படம்

சென்னை

திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக்கூறி, திமுக அரசுக்கு எதிராக வரும் 28-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது.

இது தொடர்பாக, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜூலை 23) வெளியிட்ட அறிக்கை:


"தமிழக சட்டப்பேரவைப் பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின்போது திமுக தலைவர் மு.க.ஸ்டான், இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி., தயாநிதி மாறன் எம்.பி., தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று ஊரெங்கும் பிரச்சாரம் செய்தார்கள்.

நீட் தேர்வை ரத்து செய்வது என்ற சூத்திரம் தங்களுக்கு மட்டுமே தெரியும் என்று சத்தியம் செய்தார்கள். அவர்கள் மட்டுமல்லாமல் திமுகவின் மூத்த தலைவர்களும், பிரச்சார வியூக ஆலோசகரின் அறிவுரையின்படி தயாரான தேர்தல் அறிக்கையும் நீட் தேர்வு ரத்து செய்யப்படுவது 'உறுதி, உறுதி, உறுதியோ உறுதி' என்று ஒவ்வொரு கூட்டத்திலும் முழங்கியதைக் கேட்டு சரி, ஏதோ செய்வார்கள் போலிருக்கிறது என்று தமிழக வாக்காளர்கள் நம்பி வாக்களித்தார்கள்.

சொற்ப வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருக்கும் திமுக இப்போது நீட் தேர்வுக்கு தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட பிறகு, நீட் தேர்வுக்குத் தயாராகும்படி மாணவர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறது.

எத்தனை பெரிய நம்பிக்கை துரோகத்தை தமிழக மாணவர்களுக்கு இழைத்திருக்கிறது திமுகவும், அது அமைத்திருக்கும் அரசும்!

தங்களுக்கு மட்டுமே தெரிந்த வல்லமையையும், சூத்திரத்தையும் பயன்படுத்தி திமுக அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களுக்கு இருக்கிறது. மக்களின் இந்த எதிர்பார்ப்பை உடனடியாக நிறைவேற்றும் வகையில், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள் சார்பாக அதிமுக, தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது.

எப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கான பொருட்களின் விலையும், கட்டுமானப் பொருட்களின் விலையும் உயர்வது வாடிக்கையாகிவிட்டது. பொருளாதாரமும் புரியாமல், மக்களின் துன்ப, துயரங்களும் தெரியாமல் மனம் போனபடி திமுக செயல்படுவதுதான் இந்த அவல நிலைக்குக் காரணம்.

கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரத்தை இழந்து, வருமானம் சுருங்கிப் போய் அல்லல்படும் மக்களின் துயரத்தைப் போக்க திமுக அரசு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தங்களுடைய ஆட்சி அமைந்தவுடன் பெட்ரோல் விலையை ரூ. 5-ம், டீசல் விலையை ரூ. 4-ம் குறைப்பதாகவும், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.100 மானியம் தருவதாகவும் வாக்களித்த திமுக, இதுவரை தனது வாக்குறுதியைப் பற்றி வாய் திறக்காமல் இருக்கிறது.

நூற்றுக்கணக்கான வாக்குறுதிகளைத் தமிழக வாக்காளர்களுக்கு, குறிப்பாக தமிழகப் பெண்களுக்கு அளித்த திமுக அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதுதான் நாணயமான செயல். அதுவே, அரசியல் நாகரிகமும் கூட. மாறாக திமுக அவற்றைப் பற்றிப் பேசாமல் 'அணில் ஓடுவதால் மின்சாரம் தடைப்படுகிறது' என்று கூச்சமின்றிப் பேசுகிறது. தமிழகமெங்கும் பலமுறை மின்வெட்டு நாள்தோறும் நடைபெறுகிறது.

தமிழகப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருப்பது விவசாயம். விவசாயிகளுக்கு எண்ணற்ற வாக்குறுதிகளைத் தனது தேர்தல் அறிக்கையில் திமுக கூறியுள்ளது. ஆனால், அவற்றுள் ஒன்றினைக்கூட இன்று வரை நிறைவேற்றவில்லை. விதை வித்துகள், உரம் போன்ற இடுபொருட்கள் தங்கு தடையின்றிக் கிடைத்திடவும், தடையில்லா மின்சாரம் வழங்கப்படவும் இதுவரை எதையும் செய்திராத திமுக அரசின் மெத்தனப் போக்கும், அலட்சியமும் பெரும் பொருளாதாரச் சீர்குலைவிலும், கிராமப்புற ஏழ்மையிலும் கொண்டுபோய்விடும் என்று எச்சரிக்கிறோம்.

ஒவ்வொரு நாளும் தொலைக்காட்சி செய்திகளில் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைத்து, வீணாகிப் போவதையும், அரும்பாடுபட்டு விதைத்து, அறுத்து விற்பனைக்குக் கொண்டுவந்த விவசாயி தன் உழைப்பின் கனியான நெல்மணிகள் அழுகிப்போவதைக் கண்டு அழுது துடிப்பதையும் காணும்போது தாங்க முடியாத துக்கமும், சோகமும் காண்போருக்குள் எழுகிறது. முறைகேடுகளும், லஞ்ச லாவண்யங்களும் இல்லாமல் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்யவேண்டும்.

காவிரி நதிநீர்ப் பங்கீட்டில் தமிழ்நாட்டின் உரிமைகள் நிலைநாட்டப்பட்டதற்கு ஜெயலலிதாதான் முழுமுதற் காரணம். திமுகவின் கடந்த கால ஆட்சியின்போது கர்நாடகத்தில் பல புதிய அணைகள் கட்டப்பட்டதையும், அதனால் தமிழகத்துக்கு இயற்கையாக காவிரியில் வந்திருக்க வேண்டிய தண்ணீரின் அளவு பெருமளவு குறைந்து போனதையும் வரலாற்றின் பக்கங்களில் பார்க்க முடிகிறது.

வட தமிழகத்தின் நீர் ஆதாரங்களில் முக்கியமானதான தென்பெண்ணை ஆற்றின் துணை நதியான மார்க்கண்டேய ஆற்றின் குறுக்கே பெரும் அணையைத் தற்போது கர்நாடகம் கட்டியிருக்கிறது. அதுபற்றி திமுக அரசு வாய் திறக்க மறுக்கிறது.

காவிரியில் ஒரு சொட்டு நீர் கூட வர முடியாத அளவுக்கு மேகதாது என்ற இடத்தில் பிரம்மாண்டமான அணையைக் கட்ட கர்நாடக அரசு முயன்று வரும் சூழ்நிலையில் இப்போதாவது திமுக அரசு விழிப்புடனும், முனைப்புடனும் செயல்பட்டு புதிய அணைகள் கட்டப்படுவதை நிறுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இது தமிழகம் எதிர்நோக்கியுள்ள மிகப்பெரிய ஆபத்து, அச்சுறுத்தல், அநீதி.

'அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா' என்றும், 'நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு ஓடு ராஜா நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா, ரெண்டில் ஒன்று பார்ப்பதற்கு தோளை நிமிர்த்து - அதில் நீதி உன்னைத் தேடி வரும் மாலை தொடுத்து' என்றும்; எம்ஜிஆரின் பாடல்களை ஒவ்வொரு நாளும் கேட்டு வளர்ந்து வரும் நாங்கள், 'ஆண்மை சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம் செய் முழங்கு சங்கே' என்று போர் பரணி பாடும் நிலைக்கு அதிமுகவினர் மீது திமுக அரசு பொய் வழக்கு போடும் மலிவான அரசியல் ஆயுதத்தைக் கையில் எடுத்திருக்கிறது.

அதிமுகவை அழித்துவிடலாம், ஒழித்துவிடலாம் என்று கனவு கண்டால் அது பகல் கனவாகவே முடியும். இதுபோன்ற அடக்குமுறைகளை எல்லாம் தாங்கி வலுப்பெற்ற இயக்கம்தான் அதிமுக. ஆகவே, இந்த பிற்போக்குத் தனத்தைக் கைவிட்டு நேர்மையாகவும், திறமையாகவும் ஆட்சி செய்ய திமுக முன்வரட்டும்.

தமிழக மக்களின் நலனுக்காகவும், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி மேம்படவும் மேற்சொன்ன கோரிக்கைகளை திமுக அரசின் கவனத்துக்குக் கொண்டுவர அதிமுக விழைகிறது.

திமுக அரசின் மெத்தனப்போக்கைக் களையவும், அக்கறையுடன் மக்கள் குரலுக்கு செவி சாய்க்கச் செய்யவும் வருகின்ற 28.7.2021 - புதன்கிழமை அன்று காலை 10 மணி அளவில் அதிமுக உடன்பிறப்புகள் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியம், ஊராட்சி ஆகிய பகுதிகளில் தங்கள் வீடுகளின் முன்னே பதாகைகளை ஏந்தி கவன ஈர்ப்பு முழக்கங்களை எழுப்பி தமிழக மக்களின் உரிமைக் குரல்களாய் ஒலிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, கூடி குரல் எழுப்புவோம். அது ஆளுவோரின் செவிப்பறையைச் சென்று சேரட்டும்.

நாம் வாழ்வதெல்லாம் மக்களுக்காகவே! நம் முழக்கமெல்லாம் எல்லோரும் எல்லாமும் பெறுவதற்காகவே!".

இவ்வாறு ஓபிஎஸ்- ஈபிஎஸ் தெரிவித்துள்ளனர்.


தவறவிடாதீர்!

அதிமுகதிமுகஓ.பன்னீர்செல்வம்எடப்பாடி பழனிசாமிமு.க.ஸ்டாலின்AIADMKDMKO panneerselvamEdappadi palanisamyMK stalin

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x