புதுச்சேரியில் சுருக்கு வலைக்குத் தடை கோரி தலைமைச் செயலகம் எதிரே கடலில் மீனவர்கள் போராட்டம்

கடலில் மீனவர்கள் போராட்டம்.
கடலில் மீனவர்கள் போராட்டம்.
Updated on
1 min read

சுருக்கு வலைக்குத் தடை கோரி கறுப்புக்கொடி ஏற்றிய படகுகளுடன் தலைமைச் செயலகம் எதிரே கடலில் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புதுவையில் சுருக்கு வலையைப் பயன்படுத்தி மீனவர்கள் சிலர் மீன்பிடித்து வருகின்றனர். இந்த வலையைப் பயன்படுத்துவதால், மீன்வளம் அழியும் என மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சுருக்கு வலையைப் பயன்படுத்த மீன்வளத் துறையும் தடை விதித்துள்ளது.

இந்நிலையில், சில மீனவர்கள் சுருக்கு வலையைப் பயன்படுத்த அனுமதிக்கக் கோரி, எம்எல்ஏக்கள், அமைச்சர்களைச் சந்தித்து வருகின்றனர். அதற்கு மக்கள் பிரதிநிதிகள் சிலரும் அவர்களுக்கு ஆதரவாக இருப்பதால், புதுவையில் முற்றிலுமாக சுருக்கு வலைக்குத் தடை விதிக்கக் கோரி, கனகசெட்டிகுளம் முதல் மூர்த்திக்குப்பம் வரை உள்ள 18 கிராம மீனவர்கள் கடந்த 19-ம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், விசைப்படகு, பைபர், எப்ஆர்பி படகு மற்றும் கட்டுமர உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் வீராம்பட்டினம் கடற்கரையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். கூட்டத்தில், கடலில் கறுப்புக் கொடியுடன் போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.

இதையடுத்து, இன்று (ஜூலை 23) காலை சுமார் 10 மணியளவில் தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் திரண்டனர். அங்கு தங்கள் படகுகளில் கறுப்புக் கொடிகளைக் கட்டிப் பறக்கவிட்டனர். பின்னர், அங்கிருந்து புறப்பட்டு கடற்கரை காந்தி சிலை, தலைமைச் செயலகம் எதிரே கடலுக்கு கறுப்புக் கொடி பறந்த படகுகளுடன் வந்து, சுருக்கு வலைக்குத் தடை விதிக்க வலியுறுத்திப் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் 200 விசைப் படகுகள், 140 பைபர் படகுகள், 40 எப்ஆர்பி படகுகளுடன் மீனவர்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in