

தமிழகத்தில் உள்ள 1,134 கைத்தறி சங்கங்களில் 25 சதவீதத்துக்கு மேற்பட்ட சங்கங்கள் போலி என கண்டறியப்பட்டுள்ளதால், அவற்றை ரத்து செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கைத்தறித் துறை அமைச்சர் காந்தி தெரிவித்தார்.
தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
ஆடை விற்பனை உயரும்
அரசு ஊழியர்கள் கைத்தறி ஆடைகளை வாரத்தில் 2 நாட்கள் அணிய முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். இது விரைவில் நடைமுறைக்கு கொண்டுவரப்படும். இதன்மூலம், கைத்தறி ஆடை விற்பனை கணிசமாக உயரும்.
கடந்த 10 ஆண்டுகளில் பல போலிகைத்தறி சங்கங்கள் முறைகேடாக செயல்பட்டு வந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 1,134 சங்கங்களில் 25 சதவீதத்துக்கும் அதிகமானவை போலியாக உருவாக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டு, அவற்றை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தருமபுரியில் கைத்தறி பூங்கா
தருமபுரியில் 10 ஆயிரம் ஏக்கரில் கைத்தறி பூங்கா அமைக்க திட்டமிட்டுள்ளோம். இதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 154 கோ-ஆப்டெக்ஸ் கடைகள் உள்ளன. தனியார் கடைகளுக்கு இணையாக இக்கடைகளை மேம்படுத்துவதுடன், திரைக் கலைஞர்கள் மூலம் விளம்பரப்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம். பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் பங்கேற்கும் வகையில் கைத்தறிதுறை சார்பில் சென்னையில் வரும்நவம்பர் மாதம் பிரம்மாண்ட கண்காட்சிநடத்த திட்டமிட்டுள்ளோம். இதுதொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு வெளியிடுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.