Published : 23 Jul 2021 07:11 AM
Last Updated : 23 Jul 2021 07:11 AM

கும்பகோணத்தில் பண மோசடி புகார்; நிதி நிறுவன அதிபர்களை பிடிக்க 7 போலீஸ் தனிப்படைகள்: 12 சொகுசு கார்கள், கணினிகள், ஆவணங்கள் பறிமுதல்

பல நூறு கோடி மோசடி செய்ததாக எழுந்தபுகாரைத் தொடர்ந்து, கும்பகோணம்நிதி நிறுவன அதிபர்களைப் பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், அவர்களுக்குச் சொந்தமான 12 சொகுசு கார்கள், கணினிகள், ஆவணங்களை போலீஸார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் நகர் காலனி தீட்சிதர் தோட்டத்தைச் சேர்ந்தவர் எம்.ஆர்.கணேஷ், பாஜகவின் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட வர்த்தகப் பிரிவுதலைவராக இருந்தார். இவரது சகோதரர்எம்.ஆர்.சுவாமிநாதன். இவர்கள் இருவரும் தங்கள் வீட்டிலேயே தனியார் நிதி நிறுவனத்தை நடத்தி வந்தனர்.

மேலும், கும்பகோணம் கொற்கையில் பால் பண்ணை, கும்பகோணத்தில் விமானபயிற்சி நிறுவனம் நடத்தி வருகின்றனர்.இவர்கள் சொந்தமாக ஹெலிகாப்டர் வைத்திருந்ததால் ‘ஹெலிகாப்டர் பிரதர்ஸ்' என அழைக்கப்படுகின்றனர்.

இவர்களுக்கு சொந்தமான நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் ஓராண்டில் இரட்டிப்பாக பணம் வழங்குவதாகக் கூறி, கும்பகோணம் பகுதியில் உள்ள வர்த்தகர்கள், தொழிலதிபர்கள், பொதுமக்களிடம் இருந்து பல நூறு கோடி ரூபாயை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கும்பகோணத்தைச் சேர்ந்த ஜபருல்லா - பைரோஜ் பானுதம்பதியினர், தங்களுக்கு ரூ.15 கோடியைதராமல் கணேஷ் - சுவாமிநாதன் சகோதரர்கள் ஏமாற்றியதாக கடந்த வாரம் தஞ்சாவூர் மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்தனர். இதற்கிடையே, கும்பகோணம் பகுதிமுழுவதும் ‘ஹெலிகாப்டர் பிரதர்ஸ்'ரூ.600 கோடியை பொது மக்களிடம் இருந்து வசூலித்து ஏமாற்றியதாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

இதையடுத்து, தஞ்சாவூர் சரக டிஐஜிபிரவேஷ்குமார், எஸ்பி தேஷ்முக்சேகர் சஞ்சய் ஆகியோர் தலைமையிலான தனிப் படையினர், கடந்த 2 நாட்களாக கும்பகோணத்தில் எம்.ஆர்.கணேஷ் வீடு, நிதி நிறுவனம், பால்பண்ணை ஆகிய இடங்களில் சோதனை நடத்தினர். மேலும், தலைமறைவான எம்.ஆர்.கணேஷ், எம்.ஆர்.சுவாமிநாதனை கைது செய்ய 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கும்பகோணம் எம்.ஆர்.கணேஷ் வீட்டில் இருந்த 2 பிஎம்டபிள்யு கார்கள் உட்பட 12 சொகுசு கார்களை போலீஸார் நேற்று பறிமுதல் செய்து, தஞ்சாவூர் டிஐஜி அலுவலகத்துக்கு கொண்டுவந்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது,“கும்பகோணம் நிதி நிறுவன அதிபர்கள்வீட்டில் தொடர்ந்து 2 நாட்களாக சோதனைநடத்தப்பட்டது. இதில், கணினிகள், 3 மூட்டை ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. 12 சொகுசு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.மோசடி வழக்கில் நிதிநிறுவன பொது மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றவர்களை தேடி வருகிறோம்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x