Published : 23 Jul 2021 07:11 AM
Last Updated : 23 Jul 2021 07:11 AM

கேரளாவுக்கு கனிம வளங்களை ஏற்றிச் சென்ற 11 லாரிகள் பறிமுதல்

கேரளாவுக்கு விதிகளை மீறி கனிம வளங்களை ஏற்றிச் சென்ற 11 டாரஸ் லாரிகள் வருவாய்த் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டன.

நாகர்கோவில்

‘இந்து தமிழ்’ செய்தி எதிரொலியாக குமரியில் இருந்து கேரளாவுக்கு விதிமுறைக்கு புறம்பாக பாறை, ஜல்லிகளை ஏற்றிச் சென்ற 11 லாரிகளை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து தினமும் 600-க்கும் மேற்பட்ட லாரிகளில் கல், ஜல்லி, பாறைப்பொடி உள்ளிட்ட கனிம வளங்கள் கேரளாவுக்கு கனரக வாகனங்கள் மூலம் கடத்திச் செல்லப்படுகிறது.

இதனால், சாலைகள் பழுதாகி விபத்துகள் ஏற்படுகின்றன. இதைக்கட்டுப்படுத்த முறையான நடவடிக்கை தேவை என, ‘இந்து தமிழ்’ நாளிதழில் நேற்று செய்தி வெளியாகி இருந்தது.

இதன் எதிரொலியாக, குமரிமாவட்டத்தில் இருந்து அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாகவும், உரிய ஆவணங்கள் இன்றியும் கனிம வளங்களை கேரளாவுக்கு ஏற்றிச் செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்ய மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் உத்தரவு பிறப்பித்தார். விளவங்கோடு வட்டாட்சியர் விஜயலட்சுமி தலைமையில் நடத்தப்பட்ட சோதனையில், 11 டாரஸ் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. குழித்துறை வி.எல்.சி. மைதானத்தில் அவை நிறுத்தி வைக்கப்பட்டன.

கேரளாவுக்கு தொடர்ச்சியாக செல்லும் லாரிகள் குறித்த விவரங்களை, களியக்காவிளை சோதனைச்சாவடியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம், வருவாய்த் துறையினர் திரட்டி வருகின்றனர். கனிமவளங்கள் கடத்தலைத் தடுக்க தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வருவாய்த் துறையினர் கூறினர்.

இதனிடையே, அழகிய மண்டபம் அருகே கல்லுவிளையில் நேற்று காலை அதிகளவில் கருங்கல் பாரம் ஏற்றிச்சென்ற டாரஸ்லாரி கவிழ்ந்தது. சாலையில் கருங்கற்கள் சிதறின. அந்நேரத்தில், பொதுமக்கள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x