

ராமநாதபுரத்தில் இறந்த எலியை நாய் தூக்கிச் சென்று குழி தோண்டி புதைக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியது.
ராமநாதபுரம் பாரதி நகர் பேருந்து நிறுத்தம் பகுதியில் நேற்று முன்தினம் மாலை உயிரிழந்த எலி ஒன்றை, நாயொன்று வாயில் கவ்விக் கொண்டு ஓடியது. பின்னர் நாய் அப்பகுதியில் ஈரமாக இருந்த இடத்தில் வாயாலும், காலாலும் குழி தோண்டியது. அதனையடுத்து தோண்டிய குழியில் எலியை போட்டு மூடியது. ஐந்து அறிவு ஜீவனான நாய் இறந்த எலியை குழி தோண்டி அடக்கம் செய்யும் அபூர்வ காட்சி அங்கிருந்தவர்களை வியப்பூட்டியது.
எப்போதும் பரபரப்பாக காணப்படும் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் உயிரிழந்த எலியை வேடிக்கை பார்த்துச் சென்ற நிலையில், நாய் அதை தூக்கிச் சென்று குழி தோண்டி புதைத்து அடக்கம் செய்தது எல்லோரையும் ஆச்சரியப்படுத்தியது. இதுகுறித்த வீடியோ வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் நேற்று வைரலானது.