Published : 23 Jul 2021 07:12 AM
Last Updated : 23 Jul 2021 07:12 AM

நாகர்கோவிலில் பிரதமர், உள்துறை அமைச்சரை கடுமையாக விமர்சித்த பாதிரியார்: நடவடிக்கை கோரி மதுரை காவல் ஆணையரிடம் இந்து மக்கள் கட்சி நிர்வாகி புகார்

ஜார்ஜ் பொன்னையா

மதுரை

நாகர்கோவிலில் பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோரை மிகக் கடுமையாக விமர்சித்து பேசிய பாதிரியார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்து மக்கள் கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் சோலைக்கண்ணன் புகார் அனுப்பியுள்ளார்.

மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேமானந்த சின்ஹாவுக்கு அவர் அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

குமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இணைந்து நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பேசும்போது, ‘பக்தர்களும், இந்துக்களும் உங்களை ஓட்டு போட்டு ஜெயிக்கவைக்கவில்லை. திமுக ஜெயித்தது கிறிஸ்தவ மக்களும், முஸ்லிம் மக்களும் உங்களுக்கு போட்ட பிச்சை. இதை மறந்து விடாதீர்கள். உங்கள் திறமையை வைத்து நீங்கள் ஓட்டு வாங்கவில்லை.

நாகர்கோவிலில் நடந்த கூட்டத்தில், சுரேஷ் ராஜனிடம் (திமுகமாவட்டச் செயலாளர் - கன்னியாகுமரி) கிறிஸ்தவர்களின் வீடுகளுக்கு சென்று சந்தித்து நாங்கள்ஓட்டு கேட்கிறோம் என்று கூறினோம். அவரோ, வேண்டாம் பாதர்.ஒருவேளை இதனால் இந்துக் களின் ஓட்டு கிடைக்காமல் போய்விட்டால் என்ன செய்வது என்று மறுத்துவிட்டார். இதனால்எம்.ஆர்.காந்தி (பா.ஜ.க) நாகர்கோவிலில் ஜெயித்துவிட்டார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில், நாங்கள் மெஜாரிட்டி 42 சதவீதத்தில் இருந்தோம். இப்போது அது 62 சதவீதத்தை தாண்டிவிட்டது. விரைவில் அது 70 சதவீதத்தை தொட்டுவிடும். நாங்கள் வளர்ந்து கொண்டுதான் இருப்போம். உங்களால் அதை தடுக்க முடியாது’ என அவர் பேசியிருக்கிறார். இதுதவிர பிரதமர், உள்துறை அமைச்சர், பாரத மாதா பற்றியும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார்.

இப்படி மததுவேஷம் பேசுபவர்களால்தான், நாட்டில் மத சண்டைகள் வருகின்றன. பிரதமர், உள்துறை அமைச்சருக்கு மிரட்டல் விடுக்கும் விதமாகவும், இந்துக்கள் மனதை புண்படுத்தும் வகையிலும் இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைத்து, மத கலவரத்தை தூண்டும் விதமாகவும் பேசிய ஜனநாயக கிறிஸ்தவ பேரவை உயர் மட்டக் குழு உறுப்பினரான பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீதும், இந்நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

இதுகுறித்து காவல் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, சோலைக்கண்ணன் அனுப்பிய புகார் மீதான நடவடிக்கை குறித்து காவல் ஆணையர் முடிவெடுப்பார் என்றார். இதற்கிடையே சம்பந்தப்பட்ட பாதிரியார் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து வாட்ஸ்அப் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x