

மத்திய சிறைகளில் இருப்பது போல, வீடியோ அழைப்பு வாயி லாக, உறவினர்களிடம் கைதிகள் பேசுவதற்கான வசதி, மாவட்ட மற்றும் கிளைச் சிறைகளிலும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
கோவை சரக சிறைத்துறை நிர்வாகத்துக்குட்பட்ட கோவை, சேலம் ஆகிய இடங்களில் தலா ஒரு மத்திய சிறையும், 4 மாவட்டச் சிறைகளும், 23 கிளைச் சிறைகளும் உள்ளன. இங்கு சில ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். கரோனா தொற்று அச்சம் காரணமாக, விசாரணைக் கைதிகள் யாரும் நேரடியாக மத்திய சிறைக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. கிளைச் சிறைகளில் 15 நாட்கள் வைக்கப்பட்ட பின்னரே, மத்திய சிறைக்கு மாற்றப்படுகின்றனர்.
கரோனா தொற்று பரவலால், சிறைகளில் கைதிகளை அவர்களது உறவினர்கள், பார்வையாளர்கள் சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதில் மத்திய சிறைக் கைதிகள் முறையாக முன்பதிவு செய்து, செல்போன் வீடியோ அழைப்பு மூலம், தங்களது குடும்பத்தினரை தொடர்பு கொண்டு பேசும் திட்டம் கடந்தாண்டு மார்ச் இறுதியில் தொடங்கப்பட்டது. அதன்படி, கோவை, சேலம் மத்திய சிறைகளுக்கு 10-க்கும் மேற்பட்ட ஆன்ட்ராய்டு செல்போன்கள் ஒதுக்கப்பட்டன.
அதேசமயம், மாவட்ட,கிளைச் சிறைகளில் அடைக்கப் பட்டுள்ள கைதிகள், தங்களது உறவினர்களுடன் வீடியோ அழைப்பு மூலம் பேச அனுமதிக் கப்படவில்லை. தற்போது, இங்கும் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, சிறைத்துறை அதிகாரிகள் ‘இந்து தமிழ்திசை’ செய்தியாளரிடம் கூறும்போது, ‘மாவட்ட, கிளைச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளின் உறவினர்கள் https://eprisons.nic.in என்ற இணையதள பக்கத்துக்குச் சென்றோ அல்லது vibyo என்ற செயலியை பதிவிறக்கம் செய்தோ தங்கள் பெயர் உள்ளிட்ட விவரங்களையும், சந்திக்க விரும்பும் கைதியின் பெயர், அடைக்கப்பட்டுள்ள சிறையின் விவரங்களையும் தெரிவித்து விண்ணப்பிக்கலாம்.
சிறை அதிகாரிகள் ஆய்வு செய்து, கைதிகள் வீடியோ அழைப்பில் பேசுவதற்கு, அவர்களின் உறவினர்களுக்கு ‘லிங்க்’ அனுப்பப்படும். அந்த லிங்க்கை கிளிக் செய்து, வீடியோ அழைப்பு மூலம் பேசலாம்’’ என்றனர்.
அரைமணி நேரம்
கோவை சரக சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம் கூறும்போது, ‘‘கைதிகள் அந்தந்த சிறைகளில் உள்ள கம்ப்யூட்டர் கள் வாயிலாக வீடியோ அழைப்பில் இணைந்து, அவர்களது உறவினர்கள், பார்வையாளர் களுடன் பேச ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒரு கைதிக்கு வாரத்துக்கு ஒருமுறை, அரை மணி நேரம் பேசிக் கொள்ள வாய்ப்பு வழங்கப்படும். கைதிகள் பேசும் நேரம், தேதியை சிறைத்துறை நிர்வாகத்தினர் முடிவு செய்து, உறவினர்களிடம் தெரிவிப்பர்’’ என்றார்.