

போக்சோ சட்டத்தில் இரண்டாவது முறை கைதானவர்கள் மீது குண்டர் தடுப்புச்சட்டத்தில் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது, என டிஐஜி முத்துசாமி தெரிவித்தார்.
ஈரோட்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் வகையில், காவல்துறை சார்பில், ‘காக்கும் கரங்கள்’ என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் குழுக்களுக்கான பயிற்சியை கோவை சரக டிஐஜி முத்துசாமி தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காக்கும் கரங்கள் குழுவில் குழந்தைகள் நலம் சார்ந்த, பத்து துறைகளின் அதிகாரிகள், தன்னார்வலர்கள் இடம்பெற்றுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் 34 குழுக்கள் தற்போது செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறைந்து வருகிறது.
காக்கும் கரங்கள் குழுவினர் கிராமங்கள் தோறும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்த குழு தொடங்கி ஒரு மாதத்திற்குள்ளாகவே, 450 கூட்டங்களை நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளனர். இதன் காரணமாக, ஈரோட்டில் 15 குழந்தைத் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறும்போது தயங்காமல் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் கொடுக்க முன்வருகிறார்கள். போக்சோ வழக்குகளும் குறைந்துள்ளன. போக்சோ வழக்கில் இரண்டுமுறை கைதானவர்கள் மீது குண்டர் தடுப்புச்சட்டம் பாயும் வகையில் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் ஈரோடு எஸ்பி சசிமோகன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.