

தேமுதிகவுக்கு வழங்கிய முரசு சின்னத்தை முடக்கக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
திருப்பூரைச் சேர்ந்த முரளிமோகன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘இந்திய தேர்தல் ஆணையம், தேமுதிகவுக்கு முரசு சின்னத்தை தேர்தல் சின்னமாக வழங்கியுள்ளது. இதை ஒரு சின்னமாக கருதக்கூடாது. முரசு என்பது தாளவாத்தியம். நான் திருப்பூரில் முரசு என்ற பெயரில் ஆயத்த ஆடை நிறுவனம் நடத்தி வருகிறேன். அதற்காக முரசு சின்னத்தை எனது வணிக குறியீடாக பதிவு செய்துள்ளேன். இதனால், எனது தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, தேமுதிகவுக்கு வழங்கிய முரசு சின்னத்தை முடக்க வேண்டும். தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என கோரியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோரைக் கொண்ட முதல் அமர்வில் விசாரிக்கப்பட்டது. ‘இதை பொதுநல மனுவாக கருத எந்த முகாந்திரமும் இல்லை. எனவே, மனுதாரருக்கு அபராதம் விதிக்கப்போகிறோம்’ என நீதிபதிகள் கூறினர். இதனால், மனுவை வாபஸ் பெறுவதாக மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.