அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமியுடன் அண்ணாமலை சந்திப்பு: மாநில பொதுச்செயலாளர், துணைத்தலைவர் உடனிருந்தனர்

அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமியுடன் அண்ணாமலை சந்திப்பு: மாநில பொதுச்செயலாளர், துணைத்தலைவர் உடனிருந்தனர்
Updated on
1 min read

தமிழக பாஜக தலைவராகப் பொறுப்பேற்றுள்ள கே.அண்ணாமலை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றார்.

தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன், மத்திய இணை அமைச்சரானதைத் தொடர்ந்து விருப்ப ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி கே.அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார்.

கடந்த 16-ம் தேதி சென்னையில் உள்ள பாஜக மாநிலத் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்ற அண்ணாமலை, இல.கணேசன், எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனையும் நேரில் சந்தித்தார்.

அதைத் தொடர்ந்து பாஜகவின் கூட்டணிக் கட்சியான அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை நேற்று சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அதுபோல அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது பாஜக மாநிலப் பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், மாநில துணைத் தலைவர்கள் வி.பி.துரைசாமி, எம்.என்.ராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

கூட்டணி கட்சித் தலைவர்கள் என்ற முறையில் மரியாதை நிமித்தமாக அவர்களை சந்தித்ததாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in