Published : 23 Jul 2021 07:13 AM
Last Updated : 23 Jul 2021 07:13 AM

புதுச்சேரி ரேஷன் கடைகளை திறக்க மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தல்: அமைச்சர் சாய் சரவணக்குமார் தகவல்

புதுச்சேரி அமைச்சர் சாய் சரவணக்குமார் நேற்று மாலை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

புதுச்சேரியில் மூடிக்கிடக்கும் ரேஷன் கடைகளை திறப்பதற்காக, நான் டெல்லி சென்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தொடர்பு கொள்ள முயன்றேன். நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடப்பதால், சம்மந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறுமாறு கூறினார் அவரின் ஆலோசனைப்படி மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து, ‘மூடிக்கிடக்கும் ரேஷன் கடைகளை திறக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தேன். அதற்கு தேவையான கோப்புகளை உடனடியாக தயார் செய்து அனுப்புமாறு அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து சிறுபான்மை துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வியை சந்தித்து பேசினேன். ‘புதுச்சேரியில் இருந்து இதுவரை சிறுபான்மையினருக்கான சலுகைகளை கேட்டு எந்தவிதமான கடிதங்களும் வரவில்லை’ என்று கூறி, அவர்களுக்கான கல்வி நிலையங்கள், விடுதிகள் அமைக்கவும், தொழில் தொடங்க சிறப்பான கடனுதவிகளை வழங்கவும் தேவையான கோப்புகளை தயார் செய்து அனுப்புமாறு தெரிவித்தார். அதன்பேரில் புதுச்சேரியின் 4 பிராந்தியங்களிலும் சிறுபான்மை மக்களுக்கு வருகின்ற காலத்தில் சிறப்பான திட்டங்களை தயாரித்து அனுப்பி, அதனை செய்து தரு வோம்.

மேலும் ஊரக வளர்ச்சி அமைச்சர் கிரிராஜ் சிங்கை தொடர்பு கொண்டேன். மாடு, செம்மறி ஆடு வளர்த்தல், ஒவ்வொரு பகுதிகளிலும் தூர்வாரப்படாமல் இருக்கின்ற ஏரிகளை தூர்வாரி நீராதாரத்தை அதிகரிக்கவும், மரங்கள் நடவும் தேவையான ஆலோசனைகளை அதிகாரிகளிடம் கேட்டுப்பெறுமாறு கூறினார். அதனை புதுச்சேரி மாநில அமைச்சர், அதிகாரிகளிடம் தெரிவித்தேன் என்று கூறினார்.

உடன் இருந்த அமைச்சர் நமச்சிவாயம் கூறும்போது, ‘‘அடுத்த வாரம் என்னுடன் அமைச்சர் சாய் சரவணகுமார், சட்டப்பேரவைத் தலைவர், எம்எல்ஏக்கள் டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்தித்து புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கான திட்டங்களை கொண்டு வருவதற்கு ஒப்புதல் பெற இருக்கின்றனர். மாநிலத்தின் வளர்ச்சி, மக்களின் வளர்ச்சிக்காக இணைந்து பாடுபடுவோம். என்.ஆர். காங்கிரஸ்-பாஜக கூட்டணி சுமுகமாக இருக்கிறது” என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x