

மேகேதாட்டுவில் அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்த கேரள அரசின் ஆதரவைக் கோர வேண்டும் என தமிழக முதல்வருக்கு தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக, மன்னார்குடியில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்காக ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்ட திட்ட அறிக்கையை ஒப்புதல் கேட்டு, மத்திய அரசின் ஜல்சக்தி துறைக்கு கர்நாடகா அரசு அனுப்பி உள்ளது. அந்த அறிக்கையை ஜல்சக்தி துறை அமைச்சகம், காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த திட்ட அறிக்கையை சட்டவிரோதம் என அறிவித்து நிராகரிக்க வேண்டும் என தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி, காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு அனுப்பிவைக்க வேண்டும். ஆணையக் கூட்டத்தில் விவாதிப்பதற்கு முன்பாக, மேகேதாட்டுவில் அணை கட்டப்படுவதால் தமிழகத்துக்கு ஏற்பட இருக்கும் பேராபத்தை கேரள அரசிடம் எடுத்துக் கூறி, ஆணையம் மூலம் திட்ட அறிக்கையை நிராகரிக்க தமிழகத்துக்கு ஆதரவளிக்க வேண்டும் என கேரள முதல்வரிடம், தமிழக முதல்வர் வலியுறுத்த வேண்டும் என்றார்.