Published : 23 Jul 2021 07:14 AM
Last Updated : 23 Jul 2021 07:14 AM

ஆசாரிபள்ளம் அருகே சேனாப்பள்ளி சந்திப்பு நெடுஞ்சாலையில் புதை குழிக்குள் சிக்கும் வாகனங்கள்: விபத்துகள் அதிகரிப்பால் மக்கள் பாதிப்பு

குமரி மாவட்டம் சேனாப்பள்ளி சந்திப்பில் பாசன கால்வாய் சீரமைப்பு பணி நடந்த பின்னர் நெடுஞ்சாலையை முறையாக சமன்படுத்தாததால் அப்பகுதி புதைகுழியாக மாறி விட்டது. பள்ளத்தில் சிக்கிய வாகனத்தை மீட்பதற்காக போராடும் இளைஞர்கள். படம்: எல்.மோகன்.

நாகர்கோவில்

ராஜாக்கமங்கலம்- இரணியல் நெடுஞ்சாலையில் சேனாப்பள்ளி சந்திப்பில் பாசனக் கால்வாய் சீரமைப்பு பணிக்காக துண்டிக்கப்பட்ட சாலையை சமப்படுத்தாததால் புதை குழிக்குள் அடிக்கடி வாகனங்கள் சிக்கி விபத்து நேரிடுகிறது. இதனால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம்- இரணியல் நெடுஞ்சாலை அதிக வாகன போக்குவரத்து மிகுந்த சாலை ஆகும். சரலை அடுத்துள்ள சேனாப்பள்ளி சந்திப்பில் நெடுஞ்சாலையின் கீழ் பகுதியில் ஊச்சிக்கால் ஓடை என்னும் பாசனக் கால்வாய் செல்கிறது. இதன் மூலம் 1,000 ஏக்கருக்கு மேல் தென்னை, வாழைஉள்ளிட்ட வேளாண் பாசன நிலங்கள் பயன்பெற்று வந்தது. ஊச்சிக்கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால் பிரதானக் கால்வாயில் இருந்து தண்ணீர் செல்வது 7 ஆண்டுகளுக்கும் மேலாக தடைபட்டுள்ளது.

கால்வாய் பராமரிப்பு

கால்வாயை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள், பாசனத்துறையினர், நீரினை பயன்படுத்துவோர் சங்க நிர்வாகிகள் கோரிக்கைவிடுத்தனர். இக்கால்வாய் நெடுஞ்சாலை பகுதியில் வருவதால் நெடுஞ்சாலைத்துறையின் தக்கலை உட்கோட்டம் சார்பில்இம்மாத தொடக்கத்தில் பராமரிப்புபணி தொடங்கியது. சாலையை துண்டித்து கால்வாய் சீரமைப்பு பணி நடைபெற்றதால் ராஜாக்கமங்கலம், பேயோடு வழித்தடத்தில் இருந்து இரணியல் செல்லும் வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதை வழியாக திருப்பி விடப்பட்டன.

ஊச்சிக்கால் ஓடையில் பாசனநீர் செல்ல வசதியாக ராட்சத பைப் இணைப்புகள் பொருத்தப்பட்டு பொக்லைன் மூலம் மண்தொட்டி நெடுஞ்சாலை மட்டத்துக்கு நிரப்பப்பட்டது. அதன்பின்னர் வாகனங்கள்அவ்வழியாக செல்ல அனுமதிக்கப்பட்டன.

புதை குழியால் பாதிப்பு

அவ்வப்போது பெய்யும் மழையால் பாசன கால்வாய் சீரமைப்பு நடைபெற்ற பகுதியில் மண் சகதிக்காடாக மாறி பெரிய குழிகள் தோன்றியுள்ளன.

புதைகுழிபோல் மாறி விட்ட இப்பகுதியை இருசக்கர வாகனங்களில் கடந்து செல்லும் இளைஞர்கள், பெண்கள் கீழே விழுந்து காயமடைகின்றனர். டெம்போ, லாரி போன்ற வாகனங்கள் புதைகுழிக்குள் சிக்கி போக்குவரத்து தடைபடுகிறது.

எனவே, சேனாப்பள்ளி சந்திப்புநெடுஞ்சாலை பகுதியை மண், ஜல்லி நிரப்பி சமப்படுத்தி விபத்தைதவிர்க்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராஜாக்கமங்கலம் பகுதி பாசன நீரினை பயன்படுத்துவோர் சங்க நிர்வாகி தேவதாஸ் கூறும்போது, ‘‘நெடுஞ்சாலை ஓரத்திலிருந்து பாயும் மழைநீர் குழாய் வழியாக ஓடையில் பாய்ந்தால் மீண்டும் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் செல்வதில் சிரமம் உருவாகும். எனவே, மழைநீரை ஓடை பக்கத்தில் உள்ள பிரதான பாசன கால்வாயில் விடவேண்டும்’’ என்றார்.

ஓரிரு நாளில் சீரமைப்பு

இதுகுறித்து நெடுஞ்சாலை தக்கலை உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் தனசேகரிடம் கேட்டபோது, ‘‘சேனாப்பள்ளி சந்திப்பில் ஊச்சிக்கால் பாசன வாய்க்கால் சீரமைப்பு பணி முடிந்த நிலையில், தற்போது பெய்யும் மழையால் சமப்படுத்துவதற்காக மண் கொட்டப்பட்ட இடத்தில் பள்ளம் விழுகிறது. ஜல்லி, மண் கொண்டு நிரப்பி அப்பகுதி முழுவதும் சீரமைக்கப்படும். இதற்கான நடவடிக்கை ஓரிரு நாட்களில் மேற்கொள்ளப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x