ஆட்சி முடியப் போகிற நேரத்தில் அடிக்கல் நாட்டு விழா நடத்துவது ஏமாற்று வேலை: கருணாநிதி

ஆட்சி முடியப் போகிற நேரத்தில் அடிக்கல் நாட்டு விழா நடத்துவது ஏமாற்று வேலை: கருணாநிதி
Updated on
2 min read

ஆட்சி முடியப் போகிற நேரத்தில் ஜெயலலிதா ஏழு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியிருப்பது புரியாத மக்கள் காதுகளிலே பூ சுற்றுகின்ற வேலைதான் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''ஜெயலலிதா அரசின் செயல்பாட்டுக்கு சில உதாரணங்கள் கூறுகிறேன். அமைச்சரவைக் கூட்டம் நேற்றைய தினம் நடைபெற்று இடைக்கால நிதிநிலை அறிக்கை பற்றி விவாதித்துள்ளது. ஆனால் அமைச்சரவைக் கூட்டம் என்பதே கடந்த சில மாதங்களாக நடைபெறவே இல்லை. கடந்த ஆண்டு ஜூலை மாதம் 21ஆம் தேதி அன்று அமைச்சரவைக் கூட்டம், வெறும் 20 நிமிட நேரமே நடைபெற்ற பிறகு தெரிந்தவரையில் ஆறு மாத காலமாக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றதாகத் தெரியவில்லை.மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல் துறை அதிகாரிகளின் கூட்டம் கடந்த இரண்டு ஆண்டு களாக நடைபெறவே இல்லை.

முதலமைச்சர் ஜெயலலிதா அன்றாடம் காணொலிக் காட்சிகள் வாயிலாக ஏதாவது ஒரு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுவதாக, புகைப்படம் எடுத்து ஏடுகளுக்கு விநியோகம் செய்வதைத் தான் முதலமைச்சரின் பணி என்று கருதப்படுகிறது. ஆட்சி முடிகிற போது, அடிக்கல் நாட்டு விழா நடத்தினால், அது எப்போது பயன்பாட்டுக்கு வரும்? தமது ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டது என்று சொல்லிக் கொள்வதற்காகத்தான் இதைச் செய்கிறார்கள்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையக் கழகத்துக்கு பத்துக்கு மேற்பட்ட உறுப்பினர்களை நியமிக்காமல் காலம் கடத்தப்பட்டு, தற்போது ஆட்சி முடியப் போகிறது என்றதும் அவசர அவசரமாக 11 பேரை தேர்வாணையக் கழக உறுப்பினர்களாக இன்று நியமித்திருக்கிறார்கள். அதிலும் பாதி பேர் அதிமுக வழக்கறிஞர்கள். செய்தித் துறையிலே தற்போது செயலாளராக இருப்பவர், கடந்த நான்கரை ஆண்டுகளாக அதிமுக அமைச்சர்களில் ஒருவரைப் போல பணியாற்றியவரை, நன்றிக் கடனாக தேர்வாணையக் கழகத்தில் நியமித்திருக்கிறார்கள்.

ஆட்சி முடியப் போகிற நேரத்தில் ஜெயலலிதா ஏழு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியிருப்பது புரியாத மக்கள் காதுகளிலே பூ சுற்றுகின்ற வேலைதான்! ஆட்சி முடிய இன்னும் இரண்டு மூன்று மாதங்களே இருக்கின்ற நிலையில் பொதுமக்களிடம் இருந்து வசூலிக்கப் பட்ட வரிப் பணத்தைக் கொண்டு, தங்களுக்கு வேண்டிய ஏடுகளுக்கு ஒரு பக்கம், இரண்டு பக்கம் என்று முழுப் பக்க விளம்பரங்கள் செய்து, சாலையிலே இரண்டு பக்கங்களிலும் ப்ளக்ஸ் தட்டிகளை மிகப் பெரிய அளவிலே வைத்து மக்களுக்கு அளப்பரிய இடைஞ்சல்களை விளைவித்து, ஏழு திட்டங்களுக்கு காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டியிருக்கிறார்.

முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி, 2 லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய்க்கு முதலீடு வரப் போவதாக கதை விட்டது என்னவாயிற்று என்று எதிர்க்கட்சிகள் எல்லாம் கேட்கின்றனவே, அவர்கள் வாயை அடைப்பதற்காக, 7 திட்டங்களுக்கு அடிக்கல் என்கிறார்களே தவிர வேறொன்றும் அல்ல!

முக்கிய சம்பவங்களைப் பற்றி விசாரிக்க, விசாரணைக் கமிஷன்களை அமைக்க மறுக்கும், அதிமுக அரசு, அமைத்த விசாரணைக் கமிஷன்களிட மிருந்து அறிக்கை பெறுவதிலும் சுணக்கம் காட்டுகிறது. விரைவில் தேர்தல் வரவிருக்கிறது. ஆனால் அதிமுக ஆட்சி ஐந்தாண்டுகளுக்கு முன் நியமித்த புதிய தலைமைச் செயலகம் குறித்த விசாரணைக் கமிஷனின் அறிக்கை இன்னமும் தாக்கல் செய்யப்படவில்லை. கால நீடிப்பு வழங்கிக் கொண்டே இருக்கிறார்கள். அண்மையில்கூட அந்தக் கமிஷனுக்கு மூன்று மாத கால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.

அது போலவே, தர்மபுரி மாவட்டத்தில் மறைந்த தலித் இளைஞன் இளவரசனின் மரணம் குறித்து 2013ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட விசாரணைக் கமிஷனின் முடிவும் வெளிவரவில்லை. அந்தக் கமிஷனுக்கும் அதிமுக அரசு ஆறு மாதங்கள் நீடிப்பு வழங்கியிருக்கின்றது. இவ்வாறு விசாரணைக் கமிஷனுக்கு கால நீடிப்பு கொடுப்பதால், மக்களின் வரிப் பணம்தான் வீணாவதாகச் செய்திகள் வந்துள்ளன'' என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in