

வரும் 26-ம் தேதி நடைபெறவுள்ள காவலர் உடற்தகுதி தேர்வில் பங்கேற்க கரோனா சான்றிதழ் அவ சியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர், தீயணைப்பு காவலர் என மொத்தம் 10,906 பணியிடங்கள் நிரப்பப் படவுள்ளன. இதற்கான எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 13-ம் தேதி நடைபெற்றது. இதையடுத்து, உடற் தகுதி, உடல் தாங்கும் திறன் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் கடந்த ஏப்ரல் 21-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது.
ஆனால், தமிழகத்தில் கரோனா 2-ம் அலை பாதிப்பு காரணமாக காவலர் தேர்வுகள் தள்ளி வைக்கப் பட்டன. தற்போது, தளர்வுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருப்பதாலும், கரோனா தொற்று பரவல் எண்ணிக்கை குறைவாக இருப்பதாலும் தேர்வுகள் தொடங்க உள்ளனர். இதற்காக, மாநிலம் முழுவதும் 40 தேர்வு மையங்களில் நடைபெற இருந்த ஆள் தேர்வு முகாம்கள் 20-ஆக குறைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 2,393 ஆண்கள், 687 பெண்கள் என மொத்தம் 3,080 பேர் பங்கேற்க உள்ளனர். இவர்களுக்கு வேலூர் நேதாஜி மைதானத்தில் இரண்டு கட்டங்களாக தேர்வு நடைபெற உள்ளது.
வேலூர் மாவட்டத்தில் வரும் 26-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 5-ம் தேதி வரை தேர்வு நடைபெற உள்ளது.
தினசரி 200 முதல் 300 பேர் வீதம் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். தேர்வில் பங்கேற்பவர்கள் அதற்கான அழைப்புக் கடிதத்தை www.tnusrbonline.org என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளது.
தேர்வில் பங்கேற்பவர்கள் கரோனா தொற்று இல்லை என்பதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்கள் யாராவது இருந்தால் அது தொடர்பான விவரத்தை தேர்வுமைய தலைவரிடம் குறிப்பிட்ட நாளில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அழைப்புக் கடிதத்தில் குறிப்பிட்ட விவரங்களை அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடையாள குறியீடுகளுடன் கூடிய உடைகளை அணிந்து வரக்கூடாது. வேலூரில் நடை பெறும் தேர்வு வேலூர் சரக டிஐஜி ஏ.ஜி.பாபு மேற்பார்வையில் நடைபெற உள்ளது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப் பட்டது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம் மூலம் 2-ம் நிலை காவலர்கள், சிறைக் காவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஆகிய பதவிக்கு நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற திருப்பத்தூர் மற்றும் திருவண்ணா மலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் களுக்கு வரும் 26-ம்தேதி முதல் உடற் தகுதி தேர்வு நடைபெற உள்ளது. தி.மலை மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் அசல் சான்றிதழ்கள் சரிபார்த்தல், உடற்கூறு அளத்தல் மற்றும் உடற் தகுதித் தேர்வு நடைபெற உள்ளது.
தேர்வுக்கு வருபவர்கள் முகக் கவசம் அணிந்து வர வேண்டும்.மேலும் கூடுதலாக 2 முகக் கவசம் வைத்திருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட புகைப்படத் துடன் கூடிய அடையாள அட்டையை கொண்டு வர வேண்டும். அசல் சான்றிதழ்களை கட்டாயமாக கொண்டு வர வேண்டும். அழைப்பு கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அறிவுரைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்” என தெரிவித்துள்ளார்.