

குப்பைக்கழிவுகளை முறையாக கையாளாமல் ஆங்காங்கே கொட்டுவதை தடுக்க கிராம ஊராட்சிகளில் உள்ள திடக்கழிவு மையங்கள் வரும் 25-ம் தேதிக்குள் முழுமையாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆட்சியர் அமர் குஷ்வாஹா உத்தரவிட்டார்.
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்துக்கு உட்பட்ட விஷமங்களம் ஊராட்சியின் நிர்வாக செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ஊராட்சியில் நடந்து வரும் வீடுகட்டும் திட்டம், அரசு புறம்போக்கு இடங்களின் நிலை, 100 நாள் வேலை திட்டப்பணிகள் குறித்த ஆவணங்கள் முறையாக பராமரிக்கப் படுகிறதா ? என்பதை அவர் ஆய்வு செய்தார்.
இதைத்தொடர்ந்து, விஷமங்களம் ஊராட்சிக்கு உட்பட்ட சித்தேரி கிராமத்தில் உள்ள குப்பையை தரம் பிரிக்கும் மையத் துக்கு சென்று ஆய்வு செய்தார்.
அப்போது, தரம் பிரிப்பு மையத்தில் குப்பைக்கழிவுகளை முறையாக கையாளாமலும், தரம் பிரிப்பு தொட்டிகள் அடைத்து வைக்கப்பட்டு, குப்பைக்கழிவுகள் அனைத்தும் அருகேயுள்ள சாலையோரம் வீசப்பட்டும், தரம் பிரிப்பு மையத்துக்கு அருகிலேயே எரிக்கப்பட்டிருந்ததையும் கண்டு ஆட்சியர் ஆவேசமடைந்தார்.
இது குறித்து ஆட்சியர் அமர் குஷ்வாஹா, வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் கூறும் போது, “திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 208 கிராம ஊராட்சிகளிலும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள குப்பை தரம் பிரிப்பு மையம் அனைத்தும் உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
குப்பை தரம் பிரிப்பு மையம் அமைக்க இடம் இல்லை என கூறப்படும் பகுதிகளைச் சேர்ந்தவர்கள், அதற்கான இடம் கேட்டு வருவாய்த்துறைக்கு உடனடியாக கடிதம் அளிக்க வேண்டும். தூய்மைப் பணியாளர் கள் முறையாக பொதுமக்களிடம் குப்பைக் கழிவுகளை பெற்று தரம் பிரிப்பு மையத்தில் கொட்டி தரம் பிரிக்க வேண்டும்.
அதேபோல, பொதுமக்களும் தூய்மைப் பணியாளர்களிடம் தான் குப்பையை வழங்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதையும் மீறி பொது இடங்கள், நீர் நிலைகளில் குப்பைக் கழிவுகளை கொட்டும் பொதுமக்கள் மற்றும் திருமண மண்டபங்கள், உணவகங்கள், சாலையோர உணவகங்களை கண்காணித்து அவர்கள் மீது திட்ட இயக்குநர், ஊராட்சிகளின் உதவி இயக்குநர், நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல, பொதுமக்களும் குப்பைக் கழிவுகளை ஆங்காங்கே கொட்டுவதை தவிர்த்து தங்களுடைய பங்களிப்பையும் சுகாதாரம் மேம்படுத்த முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
கந்திலி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 39 ஊராட்சிகளுக்கு உட்பட்ட 418 குக்கிராமங் களில் குப்பைக்கழிவு அகற்றுதல், திடக்கழிவு மேலாண்மை மைய பயன்பாடு, கழிவுநீர் கால்வாய் தூர்வாருதல் உள்ளிட்ட பணிகளை வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் (25-ம் தேதி) முடிக்க வேண்டும். செயல் படாமல் உள்ள சித்தேரி தரம் பிரிப்பு மையம் நாளைக்குள் (இன்று) முறையாக செயல்பட வேண்டும்’’ என அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
இதையடுத்து, உடையாமுத்தூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் ஆட்சியர் ஆய்வு நடத்தினார். அப்போது, அரசு இடம் ஆக்கிர மிப்பு அகற்றுதல் குறிப்பாக நீர்நிலைகளில் 18 இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அங்கு வசித்து வருவோர்களுக்கு மாற்று இடம் வழங்க நில அளவையர்கள் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க ஆட்சியர் அமர் குஷ்வாஹா உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அப்துல்கலீல், சித்ரகலா, ஊராட்சி செயலாளர் சங்கர், கிராம நிர்வாக அலுவலர் பிரியா உட்பட பலர் கலந்து கொண்டனர்.