

திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றி கட்டாயக்கருக் கலைப்பு செய்து, சமூக வலைதளங்களில் புகைப்படம், வீடியோ ஆதாரங்களை வெளியிடுவதாக மிரட்டியதன்பேரில் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்ட நடிகை ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாகவும், கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ததாகவும், அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாகவும் முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக நடிகை சாந்தினி அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். முன் ஜாமீன் நிராகரிக்கப்பட்ட நிலையில் மணிகண்டன் தலைமறைவானார். இந்நிலையில் அவரைத் தேடிவந்த போலீஸார், பெங்களூருவில் பதுங்கியிருந்த மணிகண்டனை ஜூன் 20 ஆம் தேதி கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
இந்நிலையில், மணிகண்டன் மீது புகார் அளித்த நடிகை, தனக்கு முன்னாள் அமைச்சர் மணிகண்டன் 10 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிடக்கோரி சென்னை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “சென்னையில் இருந்துகொண்டு வழக்கை நடத்த வேண்டும் என்ற காரணத்தினாலும் தனக்கு மாதாந்திர இடைக்கால தொகை வழங்க வேண்டும்” என மனுவில் கோரியுள்ளார்.
திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் போது பிரச்சனை ஏற்பட்டால் இழப்பீடு கோருவதற்கான நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நடிகை வழக்கு தொடர்ந்துள்ளார். மாத செலவுகள், மருத்துவச் செலவு, வாடகை போன்றவற்றிற்கான இடைக்காலத் தொகையாக ரூ 2.80 லட்சம் வழங்கவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வழக்கின் விசாரணையை சைதாப்பேட்டை நீதிமன்றம், ஆகஸ்ட் 5 ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.