திருப்பத்தூர் அருகே கோயில் நிலத்தை மீட்கப் போராடும் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி

திருப்பத்தூர் அருகே பூலாங்குறிச்சி ஸ்ரீஉருமன் கோயில் நிலத்தில் அமைக்கப்பட்ட தார்ச்சாலை.
திருப்பத்தூர் அருகே பூலாங்குறிச்சி ஸ்ரீஉருமன் கோயில் நிலத்தில் அமைக்கப்பட்ட தார்ச்சாலை.
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அறநிலையத்துறை கோயில் நிலத்தை மீட்க உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி போராடி வருகிறார்.

திருப்பத்தூர் அருகே பூலாங்குறிச்சியில் பல நூறு ஆண்டுகள் பழமையான ஸ்ரீஉருமன் கோயில் உள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் குலதெய்வமாக வழிபடுகின்றனர்.

இக்கோயிலுக்கு பெண்கள் வருவதில்லை. ஆண்கள் மட்டும் வழிபட்டு வருகின்றனர்.

இக்கோயிலைச் சுற்றிலும் 5 ஏக்கர் நிலம் உள்ளது. அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்த நிலத்தில் அத்துறை அதிகாரிகளின் அனுமதி பெறாமலேயே ஊராட்சி நிர்வாகத்தினர் சாலை அமைத்துள்ளனர். இதனால் பலரும் இந்தச் சாலையை பொதுச்சாலையாக பயன்படுத்தி வருகின்றனர்.

இதேநிலை நீடித்தால் கோயில் நிலம் ஆக்கிரமிக்கப்படும் என்பதால், கோயில் நிலத்தில் அமைக்கப்பட்ட சாலையை அகற்ற வேண்டுமென அப்பகுதியைச் சேர்ந்த முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி செல்வம் போராடி வருகிறார். இதுகுறித்து அவர் தமிழக முதல்வர், அறநிலையத்துறை அமைச்சர், மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு மனு கொடுத்துள்ளார்.

இதுகுறித்து செல்வம் கூறியதாவது: ஸ்ரீஉருமன் கோயில் வனப்பகுதியில் அமைந்துள்ளது. பூசாரி குடும்பங்கள் மட்டுமே கோயிலுக்கு வருவர். இத்தகைய பாரம்பரியமான கோயில் நிலத்திற்குள் யாரும் கேட்காமலேயே 225 அடிக்கு சாலை அமைத்துள்ளனர். மேலும் அறநிலையத்துறை அனுமதியும் பெறவில்லை.

சிலர் கமிஷன் பெறுவதற்காகவே இந்த சாலையை அமைத்துள்ளனர். இச்சாலை இருப்பதால் கோயில் நிலம் பொதுப்பாதையாக மாறிவிட்டது. மேலும் சமூகவிரோதிகள் சிலரும் சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் பழமையான கோயிலின் புனிதம் கெட்டுவிட்டது. இதனால் சாலையை அகற்ற வேண்டும். மேலும் தேவையின்றி சாலை அமைத்த ஊராட்சித் தலைவர் மற்றும் அதிகாரிகளிடம் அதற்குரிய தொகையை வசூலிக்க வேண்டும், என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in