Published : 22 Jul 2021 05:28 PM
Last Updated : 22 Jul 2021 05:28 PM

ஒளிப்பதிவு சட்டத்திருத்தம்; திரைத்துறையினரின் உரிமைக்குப் பாதுகாப்பானது: அண்ணாமலை விளக்கம்

அண்ணாமலை: கோப்புப்படம்

சென்னை

ஒளிப்பதிவு சட்டத்திருத்தம் திரைத்துறையினரின் உரிமைக்குப் பாதுகாப்பானது எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, அண்ணாமலை இன்று (ஜூலை 22) வெளியிட்ட அறிக்கை:

"மத்திய அரசு ஏற்கெனவே இருந்து வரும் ஒளிப்பதிவு சட்டத்தில் சில திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது. முதலாவதாக, ஒரு திரைப்படம் நாட்டின் பாதுகாப்புக்கோ, இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கோ, மற்ற நாடுகளுடன் உள்ள நட்புறவுக்கோ, சட்டம்- ஒழுங்குக்கோ பாதகம் ஏற்படுவதாக அமைந்தால், அந்தத் திரைப்படம் திரையிடப்பட்டு மக்கள் போராட்டங்கள் நடத்துவது, அதன் மூலம் பொது அமைதிக்கு ஊறு விளைவிப்பது, சமூகத்தில் ஆட்சேபனை உண்டாவது போன்ற காரணங்கள் இருந்தால் மட்டுமே, தணிக்கைச் சான்றிதழ் பெற்றிருந்தாலும் கூட மத்திய அரசு திரும்பப் பெற முடியும். குறிப்பிட்ட பகுதிகள் சாராம்சம் திருத்தப்பட்ட பிறகு மீண்டும் திரையிட வாய்ப்புண்டு.

இரண்டாவதாக, ஒரு படைப்பாளியின் எழுத்துபூர்வ அனுமதி இல்லாமல், அதைப் பிரதி எடுக்கவோ (பைரஸி), அதைக் காட்சிப்படுத்தவோ, எத்தகைய வகையிலும் ஒளிபரப்பு செய்திடவோ கூடாது. இதை மீறினால், 3 மாதங்கள் முதல் 3 வருடங்கள் வரை சிறை தண்டனையும், ரூ.3 லட்சம் அல்லது அந்தத் திரைப்படத்தின் தயாரிப்புச் செலவில் 5% வரை அபராதமும் விதிக்கப்படும்.

மூன்றாவதாக, இப்போது U, A, U/A என்று மூன்று விதமாக தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்பட்டு, மக்கள் பார்க்கும் திரைப்படங்கள் வகை பிரிக்கப்படுகின்றன. இதில், U/A என்பதை புதிதாக U/A 7+, U/A 13+, U/A 16+ என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட உள்ளது. இதன் மூலம், U/A திரைப்படங்களைக் குடும்பத்தோடு பார்க்க அனுமதிக்கப்பட்டாலும், எந்த வயது வரை உள்ள குழந்தைகளைத் திரையரங்குக்கு அழைத்துச் செல்லலாம் என்பதைப் புதிய வழிகாட்டுமுறை தெரிவிக்கிறது.

நான்காவதாக, தற்போதுள்ள சட்டத்தின்படி ஒரு திரைப்படத்தின் தணிக்கைச் சான்றிதழ் 10 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லத்தக்கதாகும். அதற்குப் பிறகு அதைப் புதுப்பிக்க வேண்டும். ஆனால், இப்போதைய திருத்த வரைவுப்படி ஆயுள் முழுக்கச் செல்லத்தக்கதாகும். இடைப்பட்ட காலத்தில் புதுப்பிக்கத் தேவையில்லை.

மிக முக்கியமாகக் கருத வேண்டிய திருத்தங்கள் இவை மட்டும்தான். இதில், எந்தவித சந்தேகங்களுக்கும் இடமில்லை. வரலாறு மற்றும் கதைகளில் குறிப்பிடும் நபர்களைத் தவறாக அல்லது ஆட்சேபனைக்குரிய விதத்தில் காட்சிப்படுத்துவது உள்பட மதம், சாதி உணர்வுகளைத் தூண்டும் வகையில், அமைதிக்குக் குந்தகம் ஏற்படும் விதத்தில், கற்பனைக் கதைகளைச் சித்திரிப்பதை தற்போதும், எவரும் ஏற்றுக்கொள்வதில்லை.

இந்தச் சட்டத் திருத்தங்கள் இல்லாத நிலையிலும் கூட, பல்வேறு திரைப்படங்கள் திரையிட்ட பிறகு மறு தணிக்கைக்கு நீதிமன்ற உத்தரவுகளால் உட்படுத்தப்பட்டிருக்கிறது. சில படங்களில் நீதிமன்றங்களின் வழிகாட்டுதல் படி காட்சிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. சில படங்களைத் திரையிடக் கூடாது என்று போராட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன. இவை எதை எடுத்துக் காட்டுகிறது என்று பார்ப்போமேயானால், மக்களின் உணர்வுகளுக்கும், அமைதிக்கும் குந்தகம் ஏற்படுத்துகிற திரைப்படங்கள் தடுக்கப்பட்டிருக்கின்றன. எனவே, அதுபோன்ற நிலை திரையிட்ட பிறகு வரக்கூடாது என்ற முன் திட்டமிடலுக்கு இச்சட்டத்திருத்த வரைவு பயனளிக்கலாம்.

எனவே, தமிழ்த் திரையுலகையும், தமிழக மக்களையும் பிரிக்க முடியாது. தமிழ்த் திரையுலகின் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் இந்திய அளவில் புகழ் பெற்று விளங்குவது நமக்கெல்லாம் பெருமை அளிக்கிறது. அவர்களுக்கு எந்த ஒரு குறை என்றெல்லாம் தமிழக பாஜக கட்சி சார்பில் ஆதரவாகச் செயல்படத் தயாராக இருக்கிறோம்.

'ஒரு படத்துக்கு ஒரு முறை சான்றளிக்கப்பட்டாலும், அது எப்போதைக்கும் சான்றளிக்கப்பட்டதாகப் பொருள் இல்லை. ஒரு காலகட்டத்தில் சரியாக இருந்தது, இப்போதைக்கு சரியாக இல்லாமல் போகலாம். எனவே, திரைப்படத்தை மீண்டும் பரீசீலனைக்கு எடுப்பது ஒன்றும் பெரிய விஷயமில்லை' என்று புகழ்பெற்ற இயக்குநர் ஷியாம் பெனகல் புதிய சட்டத்திருத்தம் பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

எனவே, ஒளிப்பதிவு திருத்தச் சட்டத்தில் செய்யப்பட்டுள்ள திருத்தங்கள் திரைத்துறையின் வளர்ச்சிக்கும், பாதுகாப்புக்கும் உறுதுணையாக இருக்கும் என்று நம்புகிறேன். இதுகுறித்து, எந்தவித கருத்துகளையும் பரிமாறிக் கொள்ளத் தயாராக இருக்கிறோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்".

இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x