Published : 22 Jul 2021 03:54 PM
Last Updated : 22 Jul 2021 03:54 PM

விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு; அரசியல் ரீதியில் அபாயகரமான சூழ்நிலை உருவாகும்: ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை

“முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு சம்பந்தப்பட்ட இடங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ரெய்டு மிகவும் கண்டனத்துக்குரியது. எந்த ஒரு புதிய அரசு இதுபோன்ற நடவடிக்கை எடுக்கும்போது ஒரு அபாயகரமான சூழ்நிலை அரசியல் ரீதியில் உருவாவதற்கு அடித்தளமாக அமையும்” என ஓபிஎஸ் எச்சரித்துள்ளார்.

முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட அவர் சம்பந்தப்பட்ட இடங்கள், உறவினர்கள், நண்பர்கள், உதவியாளர் சம்பந்தப்பட்ட வீடுகள் என 20க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதல் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையில் கவனம் செலுத்த வேண்டியிருந்தது. இந்நிலையில் முதல் நடவடிக்கையாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை முன்னாள் அமைச்சரின் இல்லத்தில் நடத்தியது பரபரப்பான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ரெய்டு குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் இருவரும் இன்று ஆலோசனை நடத்தினர். பின்னர் அவர்கள் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது ஓபிஎஸ் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

“அரசியல் ரீதியாக எதிர்கொண்டு எங்களைச் சந்திக்க முடியாத திமுக, இப்படி அச்சுறுத்தலின் காரணமாக எந்த நிலையிலும் எங்களை எதிர்கொள்ள முடியாது. எவ்வளவு பெரிய அச்சுறுத்தல் வந்தாலும் அதை எதிர்கொள்ள அதிமுக தயாராக இருக்கிறது.

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இதுபோன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதை திமுக அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும். சட்டபூர்வமான நடவடிக்கை எதுவாக இருந்தாலும் அதை அதிமுக சந்திக்கும்.

கடந்த 10 ஆண்டுகாலம் தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளுக்கு ஊறு வந்தபோது அதைக் காப்பாற்ற அதிமுக அரசு சட்டபூர்வமாக நடவடிக்கை எடுத்து எப்படி வெற்றி கண்டது என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். ஒரு அரசியல் இயக்கம், ஆட்சியில் இருந்தபோது தமிழக மக்களின் உரிமைகளையும், தமிழக மக்களின் ஜீவாதார உரிமைகளையும் காத்தது என்பது வரலாறு.

தமிழக விவசாய மக்களைக் காப்பாற்ற மறைந்த முதல்வர் ஜெயலலிதா சட்டப் போராட்டம் நடத்தி உரிமைகளை மீட்டுத் தந்தார் என்பது வரலாறு. மீத்தேன் எரிவாயு தஞ்சை டெல்டா பகுதியில் மிகப்பெரிய அபாயத்தை ஏற்படுத்தப்போகிறது என்பதைக் கவனத்தில் கொண்டு டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இவ்வாறு மக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை, இடர்ப்பாடுகளைக் களைகின்ற அரசாக அதிமுக அரசு, மக்கள் நல அரசாகச் செயல்பட்டது என்பது அனைவரும் நன்றாக அறிந்ததே. இன்றைக்கு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு சம்பந்தப்பட்ட இடங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ரெய்டு மிகவும் கண்டனத்துக்குரியது.

எந்த ஒரு புதிய அரசும் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கும்போது ஒரு அபாயகரமான சூழ்நிலை அரசியல் ரீதியில் உருவாவதற்கு அடித்தளமாக அமையும் என்பது ஏற்கெனவே தமிழகத்தில் நல்ல பாடமாக அமைந்துள்ளது.

ஆகவே, புதிதாகப் பொறுப்பேற்றுள்ள திமுக அரசு, காழ்ப்புணர்ச்சி காரணமாக, அரசியல் ரீதியாக, ஜனநாயகக் கடமைகளை முறையாக நிறைவேற்றிய அதிமுக மீது ஜனநாயக விரோத நடவடிக்கைகளைத் தொடுத்துள்ளது கண்டனத்துக்குரியது''.

இவ்வாறு ஓபிஎஸ் தெரிவித்தார்.

எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுப்பது எப்படி காழ்ப்புணர்ச்சியாகும்? அது சட்டபூர்வமாகத் தானே நடக்கிறது? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த ஓபிஎஸ், ''சட்டபூர்வமாக அதை எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம் என்று ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். எவ்வித முகாந்திரமும் இல்லாமல் விஜயபாஸ்கர் இல்லத்தில் அவர்கள் நுழைந்துள்ளனர். இதற்குரிய பரிகாரம் உயர் நீதிமன்றம் மூலம் பெறப்படும்'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x