

காலியாக உள்ள அனைத்து உயர் சிறப்பு மருத்துவப் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும் என, தமிழ்நாடு பட்ட மேற்படிப்பு மருத்துவ மாணவர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக, தமிழ்நாடு பட்ட மேற்படிப்பு மருத்துவ மாணவர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அன்பரசன் வெளியிட்ட அறிக்கை:
"அரசு மருத்துவக் கல்லூரிகளில் உயர் சிறப்பு மருத்துவம் (DM/MCH ) பயிலும் மருத்துவர்கள் தங்களுடைய கட்டாய அரசுப் பணியைச் செய்வது இல்லை என்று அரசு அவர்கள் மீது குற்றம் சுமத்தும் நிலையில், உண்மையோ தலைகீழாக உள்ளது.
2020ஆம் ஆண்டு 144 உயர் சிறப்பு மருத்துவர்கள் தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருந்து உயர் சிறப்பு மருத்துவம் பயின்று முடித்தனர். இவர்களில் ஒருவருக்குக் கூட உயர் சிறப்பு மருத்துவ சேவை செய்ய அரசு பணி நியமனம் செய்யவில்லை.
கடந்த ஆண்டு கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக, உயர் சிறப்பு மருத்துவர்களுக்கு கோவிட் மருத்துவமனைகளில் பணிபுரிய பணி ஆணைகள் வழங்கப்பட்டன. பல மருத்துவர்கள் முழுமையான ஈடுபாட்டுடன் கோவிட் பெருந்தொற்று ஏற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர்.
இந்தப் பணியின்போது பல மருத்துவர்கள் அப்பெருந்தொற்றுக்குத் தாங்களும் உள்ளாகி சிகிச்சைக்கு உள்ளாகினர். நோயில் இருந்து குணமாகிய பிறகு மீண்டும் அதே கோவிட் மருத்துவமனைகளில் பணிபுரிந்தனர்.
ஜூலை 05 மற்றும் 06ஆம் நாட்களில் இவர்களுக்கான பணி நியமனக் கலந்தாய்வு நடைபெற்றது. இக்கலந்தாய்வில் உயர் சிறப்பு மருத்துவப் பணியிடங்கள் எதுவும் நிரப்பப்படவில்லை. உயிர் காக்கும் உயரிய சிகிச்சை துறைகளில் பல பணியிடங்களைக் கடந்த ஓராண்டு காலத்துக்கும் மேலாக காலிப் பணியிடங்களாகவே வைத்துள்ளனர்.
இருதய சிறப்பு மருத்துவர், சிறுநீரக சிறப்பு மருத்துவர், சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர், குடல் அறுவை சிகிச்சை நிபுணர், மூளை மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர், ரத்த நாள அறுவை சிகிச்சை நிபுணர் போன்ற பல்வேறு உயர் சிறப்பு மருத்துவப் பணியிடங்கள் காலியாக உள்ளன.
அவற்றில் பணி நியமனங்கள் வழங்காமல் இந்த மருத்துவர்களை இரண்டாம் நிலை மருத்துவமனைகளில் பணிபுரியக் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். அதிலும், 144 உயர் சிறப்பு மருத்துவர்களுக்கு இருபதுக்கும் குறைவான பணி இடங்களே கலந்தாய்வில் காண்பிக்கப்பட்டன.
உயர் சிறப்பு மருத்துவர்கள் சுகாதாரக் கட்டமைப்பின் மிக முக்கியமான தூண்கள். அவர்களை உரிய பணி இடங்களில் நியமித்து, அவர்களின் சேவையை அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டியது அரசின் தலையாய கடமை.
அவர்களை உரிய இடங்களில் பணி நியமனம் செய்யமல் இருப்பது, ஏழை நோயாளிகளுக்கு இழைக்கப்படும் பெரும் தீங்கு. இந்த இளம் மருத்துவர்கள் தங்களைத் தங்கள் துறை சார்ந்த பணியிடங்களில் பணியமர்த்தும்படி அரசிடமும், மருத்துவக் கல்வி இயக்குநரிடமும் பலமுறை கோரிக்கை விடுத்துவிட்டனர். இருந்தும் பணி நியமனம் வழங்கப்படாமல் அரசு காலம் தாழ்த்தி வருகிறது.
கடந்த ஒரு மாதகாலமாக இந்த உயர் சிறப்பு மருத்துவர்கள் வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர். இவ்வாறான சூழ்நிலையில், தனியார் மருத்துவமனைகளுக்குப் பணிக்குச் செல்ல வேண்டிய சூழலுக்கு இந்த மருத்துவர்கள் தள்ளப்படுகின்றனர்.
அரசின் சுகாதாரக் கட்டமைப்பு, இதன் மூலம் இந்த சிறப்பு மருத்துவர்களை நிரந்தரமாக இழக்கும் சூழ்நிலை உருவாகிறது. இதனால் பாதிக்கப்படுவது அரசு மருத்துவமனைகளை நம்பியுள்ள ஏழை நோயாளிகள்தான் என்பது வருந்தக்கூடிய உண்மை.
பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் இருதய சிகிச்சை துறை, சிறுநீரக சிகிச்சை துறை, நரம்பியல் சிகிச்சை துறை, குடல் அறுவை சிகிச்சை துறை, ரத்த நாள அறுவை சிகிச்சை துறை, புற்றுநோய் சிகிச்சை துறை மற்றும் புற்றுநோய் அறுவை சிகிச்சை துறை உள்ளிட்ட பல துறைகள் நிறுவப்படாமலே உள்ளன.
இம்மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள் இந்த உயர் சிகிச்சைகளை எவ்வாறு பெறுவார்கள்? லட்சங்களில் செலவு செய்து தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியாத நோயாளர்கள் எங்கு செல்வார்கள்? உயர் சிகிச்சை மருத்துவத் துறை மருத்துவர்களை அங்கு பணி நியமனம் செய்யாதது மக்களுக்கு இழைக்கப்படும் பெரும் தீங்கு இல்லையா?
அதுமட்டுமின்றி, இருதய சிகிச்சை, சிறுநீரக சிகிச்சை, ரத்த நாள அறுவை சிகிச்சை, குடல் அறுவை சிகிச்சை, மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை போன்ற பல்வேறு மருத்துவப் பணியிடங்கள் காலியாகவே வைக்கப்பட்டுள்ளன. இதுவும் மக்களுக்கு இழைக்கப்படும் பெரும் தீங்கு.
இன்றைய கால சூழலில், நாற்பது வயதுக்கு உட்பட்ட பலருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு வருகின்றனர். மாரடைப்பு நோய்க்கு பிரைமரி ஆஞ்சியோபிளாஸ்டி என்னும் சிகிச்சையே நல்ல பலன்களைத் தருவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஆனால், பல அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இருதய மருத்துவர் பற்றாக்குறை காரணமாகவும், இருதய மருத்துவர் இல்லாத காரணத்தாலும் இருபத்து நான்கு மணி நேரமும் இயங்க வேண்டிய இந்த பிரைமரி ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்யப்படுவது இல்லை.
மேலும், இருதய மருத்துவர்கள் பற்றாக்குறை காரணமாக, சில மருத்துவமனைகளின் கேத் லேப் எனப்படும் இருதய ஆய்வகங்கள் செயல்படாமலே உள்ளன. இதனால், பெரிதும் பாதிக்கப்படுவது நோயாளர்கள் மட்டும் இல்லாது அவர்களின் குடும்பமும், குழந்தைகளும் ஆவர்.
இளம் வயது இருதய நோயாளிக்கு உரிய சிகிச்சை கிடைக்காதபோது, அவரின் குழந்தைகள் சிறு வயதிலேயே கல்வியை நிறுத்திவிட்டு வேலைக்குச் செல்ல வேண்டிய சிரமத்துக்கு ஆளாக நேரிடுகிறது. இதுபோன்ற பல சமூகப் பிரச்சினைகளுக்கு இது வழிவகுக்கும்.
இவற்றுக்குத் தீர்வு காணும் வகையில், காலியாக உள்ள அனைத்து உயர் சிறப்பு மருத்துவப் பணியிடங்களை உடனடியாக நிரப்பிடவும், உரிய எண்ணிக்கையிலான உயர் சிறப்பு பணியிடங்களை உருவாக்கியும் அரசு துரித நடவடிக்கை எடுத்து மக்கள் நலன் காக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்".
இவ்வாறு அன்பரசன் தெரிவித்துள்ளார்.