

தமிழகத்தில் புயல், வெள்ளத்தைவிட இடி, மின்னலால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மத்திய, மாநில பேரிடர் மேலாண்மைத் துறைகள் எடுத்து வரும் நடவடிக்கைகளால் நாடுமுழுவதும் மழை வெள்ளம், புயலால் ஏற்படும் உயிரிழப்புகள் வெகுவாகக் குறைந்துள்ளன. அதனுடன் இடி, மின்னலால் ஏற்படும் உயிரிழப்புகளை ஒப்பிடும்போது, இடி, மின்னல் உயிரிழப்புகளே அதிகமாக உள்ளன.
நகர்ப்புறங்களில் செல்போன் கோபுரங்களில் இடிதாங்கிகள் நிறுவுவதால் இடி, மின்னலால் அரிதாகவே உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. கிராமப்புறங்களில் ஏற்படும் உயிரிழப்புகள் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் கவனம் பெறுவதில்லை.
கடந்த 10-ம் தேதி ஒரே நாளில் உத்தரப்பிரதேசத்தில் 41 பேர், ராஜஸ்தானில் 20 பேர்,மத்தியப் பிரதேசத்தில் 7 பேர் என 68 பேர் இடி, மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் மழை வெள்ளம் காரணமாக கடந்த 2017-18 நிதியாண்டு முதல் 2020-21 வரை 195 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் அதே காலகட்டத்தில் இடி, மின்னலால் உயிரிழந்தோர் 264 ஆக உள்ளது.
தமிழகத்தில் இடி, மின்னலால் ஏற்படும்உயிரிழப்புகளைக் குறைக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து பேரிடர் மேலாண்மைத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
இடி, மின்னலால் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைக்க தேசிய பேரிடர் மேலாண்மைத் துறை, இந்திய வானிலை ஆய்வு மையம் ஆகியவற்றுடன் வாரம் ஒருமுறை விவாதிக்கப்பட்டு வருகிறது. புனே ஐஐடி சார்பில், தமிழகத்தில் 9 இடங்களில் இடி,மின்னல் உணர் கருவிகள் நிறுவப்பட்டுள்ளன. அவை தலா 200 கிமீ சுற்றளவுக்கு கண்காணிக்கும் திறன் உடையவை. அவற்றின் மூலம் கிடைக்கும் தரவுகள், ‘டாமினி’ (DAMINI) என்ற செயலி மூலமும் தெரிவித்து எச்சரிக்கப்படுகிறது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வழங்கும் தரவுகள் அடிப்படையில் பேரிடர் மேலாண்மைத் துறையின் ‘டிஎன் ஸ்மார்ட்’ செயலி (TN SMART), செய்தி தொலைக்காட்சிகள், ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலம் ஒரு மணி நேரம் முன்னதாக எச்சரிக்கப்படுகிறது.
மேலும், இடி, மின்னல் ஏற்படும்போது நடந்துகொள்ள வேண்டிய முறைகள் குறித்த விழிப்புணர்வு வீடியோ, செய்தித் துறையின் நவீன வாகனங்கள் மூலம் திரையிடப்பட்டு வருகிறது. தமிழக அரசின் நடவடிக்கைகளால் முந்தைய ஆண்டுகளைவிட இடி, மின்னலால் ஏற்படும் உயிரிழப்புகள் தற்போது குறைந்துள்ளன.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
சென்னையில் உள்ள ரேடார் பல ஆண்டுகளாக பழுதாகியுள்ளது. ஒடிசாமாநிலம் போன்று ரேடார் எண்ணிக்கையை அதிகரிப்பது, வளிமண்டல மேலடுக்கு கண்காணிப்புக் கருவிகளை தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் பறக்க விடுவதன் மூலம் இன்னும் பல மணி நேரம் முன்னதாக இடி, மின்னல் ஏற்படுவதை அறிவித்து எச்சரிக்க முடியும் என்கின்றனர் வானிலை ஆர்வலர்கள்.
இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் எஸ்.பாலசந்திரன் கூறியதாவது:
சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது ‘நவ் காஸ்ட்’ எச்சரிக்கை (NowcastWarning) முறையில் 2 மணி நேரத்துக்கு முன்னதாக இடி, மின்னல், மழை குறித்துதெரிவிக்கப்படுகிறது. உலக வானிலை அமைப்பு அறிவுறுத்தல்படி 300 கிமீ சுற்றளவுக்கு ஒரு கருவி வீதம் இரு இடங்களில் வளிமண்டல மேலடுக்கு கண்காணிப்பு கருவிகள் பறக்க விடப்படுகிறது. இவற்றைக் கூடுதலாக பறக்க விடுவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.